தாயுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை அடித்துக்கொன்ற மகன்.. ஈரோட்டில் பரபரப்பு


தாயுடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலனை அடித்துக்கொன்ற மகன்.. ஈரோட்டில் பரபரப்பு
x

தலமலை வனப்பகுதியில் சாக்கு மூட்டையில் கிடந்தது குமாரின் எலும்புக்கூடுகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தலமலை வனச்சரகத்துக்குட்பட்ட தொட்டாபுரம் வனப்பகுதியில் கடந்த 26-ந் தேதி தலமலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. உடனே அங்கு சென்று பார்த்தபோது ஒரு சாக்கு மூட்டை கிடந்தது.

பின்னர் இதுகுறித்து ஆசனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் (பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த சாக்கு மூட்டையை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் மனித எலும்புக்கூடுகள் இருந்தது. இதைத்தொடர்ந்து அவற்றை கைப்பற்றிய போலீசார் ஆய்வுக்காக சென்னையில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார், சாக்கு மூட்டையில் கிடந்த மனித எலும்புக்கூடுகள் யாருடையது? மர்ம நபர்கள் யாரையாவது கொலை செய்து அதை சாக்குமூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசிவிட்டு சென்றனரா? போன்ற கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே கடந்த மே மாதம் 27-ந் தேதி தொட்டாபுரம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி குமார் (வயது 41) என்பவரை காணவில்லை என அவருடைய உறவினர்கள் ஆசனூர் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து போலீசார் வனப்பகுதியில் எலும்புக்கூடாக கிடந்தவர் காணாமல் போன குமாராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

விசாரணையில் தலமலை வனப்பகுதியில் சாக்கு மூட்டையில் கிடந்தது குமாரின் எலும்புக்கூடுகள் என்பதும், அவரை யாரோ கொலை செய்து உடலை சாக்குமூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசிச்சென்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி திடீர் திருப்பமாக தொட்டாபுரத்தை சேர்ந்த தொழிலாளி நாகமல்லு (வயது 24) என்பவர் குமாரை தான் கொலை செய்ததாக கூறி தலமலை கிராம நிர்வாக அலுவலர் தம்புராஜிடம் சரணடைந்தார். பின்னர் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து நாகமல்லு போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்த விவரம் வருமாறு:-

நானும், எனது தாய் முத்துமணியும் (43) தொட்டாபுரம் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறோம். என்னுடைய தந்தை ராமசாமி டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் என் தாய்க்கும், எங்கள் பகுதியில் வசித்த குமாருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது. இதை அறிந்து அவரை நான் எச்சரித்தேன். ஆனால் அவர் என் தாயுடனான கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இந்தநிலையில் நான் கடந்த மே மாதம் 27-ந் தோட்டத்தில் இருந்து வீட்டுக்கு வந்தேன். அப்போது குமாரும், எனது தாயும் அங்கு தனிமையில் உல்லாசமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

உடனே குமாரை பிடித்து போலீசில் ஒப்படைக்க கயிற்றால் கட்டிவைத்திருந்தேன். அப்போது குடிபோதையில் இருந்த அவர் என்னை தகாத வார்த்தையில் திட்டிக்கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அருகே கிடந்த சுத்தியலை எடுத்து குமாரின் தலையில் ஓங்கி அடித்தேன். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து கொலையை மறைக்க எண்ணி என்னுடைய பெரியப்பா மகன் மாதேவனை (21) துணைக்கு அழைத்தேன். பின்னர் 2 பேரும் சேர்ந்து குமார் உடலை மறைக்க திட்டம் தீட்டினோம். வனப்பகுதியில் உடலை வீசிவிட்டால் வனவிலங்குகள் தின்று விடும். நான் தப்பித்துக்கொள்ளலாம் என நினைத்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று உடல் இருந்த மூட்டையை வீசிவிட்டு வீட்டுக்கு வந்து விட்டோம். யாரும் எங்களை கண்டுபிடிக்கவில்லை என நினைத்து கொண்டிருந்தோம்.

ஆனால் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி வனத்துறையினர் ரோந்து சென்றபோது சாக்கு மூட்டையில் இருந்த எலும்புக்கூடுகளை எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து அறிந்த நான் இனி போலீசார் என்னை பிடித்து விடுவார்கள் என பயந்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதையடுத்து நாகமல்லுவை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையை மறைத்ததாக முத்துமணியும், உடலை மறைக்க உடந்தையாக இருந்ததாக மாதேவனும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தாளவாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story