தாயை கடித்த நாயை அடித்துக்கொன்ற மகன்
தாயை கடித்ததாலும், தன்னை பார்த்து குரைத்ததாலும் நாய் மீது கிரண் ஆத்திரத்தில் இருந்தார்.
தேனி,
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் கிரண் (வயது 26). தேங்காய் வெட்டும் தொழிலாளி. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த குள்ளப்பகவுண்டன்பட்டி சாமாண்டிபுரத்தை சேர்ந்த அருண் என்பவரின் கொலை வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிரண், கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். சம்பவத்தன்று இவர், இந்திராகாலனியில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சரண்யா (40) என்பவர் வளர்த்து வந்த நாய், கிரணை பார்த்து குரைத்ததாக கூறப்படுகிறது. அதே நாய், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிரணின் தாய் செல்வியை (45) கடித்தது.
தாயை கடித்ததாலும், தன்னை பார்த்து குரைத்த தாலும் அந்த நாய் மீது கிரண் ஆத்திரம் அடைந்தார். இதனையடுத்து பின்னங்காலை வாரி நாயை பிடித்தார். பின்னர், அங்கிருந்த வாசல் படிக்கட்டில் ஓங்கி அடித்தார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் நாய் துடி, துடித்து பரிதாபமாக இறந்தது.
இதனைக்கண்டு அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். இது தொடர்பாக கிரணிடம் அவர்கள் தட்டிக்கேட்டனர். அப்போது, அவர்களுக்கு கிரண் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், கூடலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிரணை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சரண்யா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரணை கைது செய்தனர். பின்னர் அவர், உத்தமபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.