ரெயிலில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத பெண் மாயமான தாய் என நினைத்து அடக்கம் செய்த மகன்
திருவள்ளூர் பகுதியில் ரெயிலில் அடிபட்டு இறந்தவர் தனது தாயார் எனக் கூறி உடலை வாங்கி அடக்கம் செய்த நிலையில் மீண்டும் உயிரோடு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அடுத்த சேலை கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சொக்கம்மாள் (வயது 66) இவருக்கு காந்தி, வெங்கடேசன், சரவணன் என்ற 3 மகன்கள் உள்ளனர். காந்தி, வெங்கடேசன் இருவரும் சென்னையிலும், சரவணன் சேலை கண்டிகை கிராமத்திலும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொக்கம்மாளுக்கும் எதிர்வீட்டுகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் சொக்கம்மாள் கோபித்துக் கொண்டு சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் கடந்த 24-ந் தேதி திருவள்ளூர்-புட்லூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் இறந்தார்.
இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் இதுபற்றி துண்டு பிரசுரம் மூலம் தகவல் வெளியிட்டிருந்தனர். இதனைக்கண்ட சொக்கம்மாளின் மகன் சரவணன், சென்னையில் உள்ள அண்ணனுக்கு தகவல் சொல்ல முயற்சித்துள்ளார். அவர்கள் செல்போனை எடுக்காததால் இது எனது தாய் தான் எனக்கூறி திருவள்ளூர் ரெயில்வே போலீசாரிடம் தெரிவித்து உடலை வாங்கி சேலை கண்டிகை சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சேலை கண்டிகை கிராமத்தில் உள்ள சரவணன் வீட்டிற்கு தாய் சொக்கம்மாள் வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் தனது தாய் இறந்து விட்டதாக கூறி புதைத்து விட்டதை நினைத்து செய்வதறியாது தவித்தார். நான் உயிரோடு தானே இருக்கிறேன் என தாயும் அழுது புலம்பியுள்ளார். தனது தாயைப் போலவே இறந்த மூதாட்டி இருந்ததாக சரவணன் அவரது உடலை புதைத்து விட்டதாக திருவள்ளூர் ரெயில்வே போலீசாரிடம் சரவணன் கூறியுள்ளார். இதையடுத்து இதேபோன்று வேறு யாராவது காணாமல் போய், புகார் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி சகுந்தலா (வயது 56) என்பது தெரியவந்தது. இதனையடுத்து சகுந்தலாவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். திருவள்ளூர் தாசில்தார் மதியழகன் முன்னிலையில் துணை வட்டாட்சியர் அம்பிகா, வருவாய் ஆய்வாளர் கணேஷ், வி.ஏ.ஓ. மலர்க்கொடி, திருவள்ளூர் ரெயில்வே போலீசார் ஆகியோர் டாக்டர்களை கொண்டு அடக்கம் செய்த மூதாட்டியின் உடலை நேற்று தோண்டி எடுத்து ஆய்வு செய்தனர். அப்போது சகுந்தலாவின் உடலில் இருந்த மச்சம் மற்றும் கையில் பச்சை குத்தியிருப்பதைப் பார்த்து இது சகுந்தலா தான் என உறுதி செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.