ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனை காப்பாற்றிய ராணுவ வீரர்
ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனை ராணுவ வீரர் காப்பாற்றினார்.
பந்தலூர்: பந்தலூர் பகுதியில் தொடர் மழை காரணமாக அத்திகுன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று அத்திகுன்னா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கும் அசாம் மாநிலத்தை சேர்ந்த முகமது சாபிக்கின் மகன் சாபிக்(வயது 7) என்ற சிறுவன், ஆற்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது சிறுவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டான். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் சிறுவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதையடுத்து அந்தப்பகுதியை சேர்ந்த மத்திய துணை ராணுவ படை வீரரான ஜேம்ஸ் என்பவர் ஆற்றில் குதித்து நீண்டதூரம் நீந்தி சென்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சாபிக்கை பத்திரமாக மீட்டு காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் சிறுவன் சாபிக்கை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆற்று வெள்ளத்தில் ்அடித்து செல்லப்பட்ட சிறுவனை, சாமர்த்தியமாக செயல்பட்டு காப்பாற்றிய ராணுவ வீரர் ஜேம்சுக்கு பந்தலூர் தாசில்தார் கிருஸ்ணமூர்த்தி, போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து அத்திகுன்னா ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.