வங்கியில் கடன் வாங்கி அமைத்த கடையை திறக்க அனுமதிக்க வேண்டும்- மாற்றுத்திறனாளி கண்ணீர்மல்க கோரிக்கை
வங்கியில் கடன் வாங்கி அமைத்த கடையை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மன்னார்குடி 3-ம் தெருவை சேர்ந்த சந்திரசேகரன் என்ற மாற்றுத்திறனாளி தனது மனைவி உதவியுடன் கலந்து கொண்டு கலெக்டர் சாருஸ்ரீயிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-மாற்றுத்திறனாளியான எனக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். சுய தொழில் நடத்தி குடும்பத்தை பாதுகாக்க முடிவு செய்தேன். அதன்படி பெட்டிக்கடை (ஸ்டால்) வைப்பதற்கு மாவட்ட தொழில் மையம் மூலம் மாற்றுத்திறனாளிக்கான பாரத பிரதமர் சுய தொழில் திட்டத்தின் கீழ் மன்னார்குடியில் உள்ள ஒரு வங்கியில் கடன் உதவி பெற்று வங்கியின் வலது புறம் கடை அமைத்துள்ளேன். இந்த கடையை திறப்பதற்கு அனுமதி கேட்டு நகராட்சியில் விண்ணப்பம் செய்தேன். ஆனால் கடையை திறக்க அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக நான் வங்கியில் பெற்ற கடன் தவணை தொகையை திருப்பி செலுத்த இயலவில்லை. கடை நடத்த முடியாமல் வருமானமும் இன்றி எனது குடும்பம் வறுமையில் உள்ளது. எனவே உரிய அறிவுறுத்தல்களை வழங்கி கடையை திறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், உடனடியாக மன்னார்குடி நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.