இளைஞர்களை தொற்றிய 'செல்பி' மோகம்
புகைப்படங்களின் சிறப்பும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடப்படும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி உலகப் புகைப்பட நாள் விழா கொண்டாடப்படுகிறது.
உலக புகைப்பட தினம்
19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். பிரெஞ்சு அறிவியல் அகாடமி அந்த கண்டுபிடிப்பை அங்கீகரித்தது. அதை 'உலகிற்கு ஒரு பரிசு' என்று அழைத்தது. பின்னர் பிரஞ்சு அரசாங்கம் காப்புரிமையை வாங்கியது. ஆகஸ்டு 19-ந்தேதி, பிரான்ஸ் நாட்டு அரசு 'டாகுரியோடைப்' செயல்பாடுகளை 'பிரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் இன்றைக்கும் உலகப் புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.
1826-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். இந்த புகைப்படம் நாளடைவில் அழிந்தது. இதன் பின், 1839-ம் ஆண்டு லூயிஸ் டாகுவேரே, பாரிசில் உள்ள போல்வர்டு கோவிலை, அருகில் உள்ள தெருவைப் புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இதுவாகும்.
வரலாற்றுப் படங்கள்
20-ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன.
குறிப்பாக, சீன வீரர்களின் ராணுவப் பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன், வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994-ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் போட்டோ ஆகியவற்றைக் கூறலாம்.
சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிகை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு புலிட்சர் விருதுகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வரலாற்றோடு வளர்ந்து வரும் புகைப்படக்கலை தற்போது அனைவரது கைகளுக்கும் செல்போன்கள் மூலம் சென்றுவிட்டது. தன்னையே தான், படம் எடுக்கும் செல்பி வரைக்கும் வளர்ந்துவிட்டது. இதுபற்றி பல்வேறு தரப்பினர் கூறிய கருத்துகள் வருமாறு:-
டிஜிட்டல் மயம்
புதுக்கோட்டையை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஞானசேகரன்:- கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கேமராக்கள் பிலிம் ரோலில் எடுக்கும் வகையில் தான் இருந்தது. அப்போது அதில் புகைப்படம் எடுத்து, அதனை டார்க் ரூமில் வைத்து கழுவி பிரிண்ட் போடப்படும். இதனை கையாள்வதிலும், புகைப்படம் எடுப்பதிலும் பல்வேறு சிரமங்கள் இருந்தன. இருப்பினும் அதற்கேற்ப நேர்த்தியாக குறிப்பிட்ட அளவில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. தற்போது டிஜிட்டல் மயமான பின்பும், கண் சிமிட்டும் நேரத்தில் பல புகைப்படங்கள் எடுக்கக்கூடிய வசதிகள் கேமராவில் வந்துவிட்டன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. கேமராக்களுக்கு இணையாக செல்போன்களும் வந்துவிட்டன. சிறுவர்களே அதில் புகைப்படம் எடுத்துவிடுகின்றனர். புகைப்படம் எடுத்து பிரசுரிப்பது, பிரிண்ட் எடுப்பதில் முன்பு இருந்த சிரமங்கள் தற்போது எதுவும் இல்லை. புகைப்படம் எடுத்த சில நிமிடங்களில் பிரிண்ட் போடும் வசதியும் வந்துவிட்டன. பலரும் இன்று டிஜிட்டல் கேமராக்கள் வாங்கி புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்காக வைத்து வருகின்றனா். மேலும் தங்களது வீடுகளிலும் விசேஷங்களுக்கு அவர்களாகவே புகைப்படம், வீடியோ எடுத்து விடுகின்றனர். புகைப்படங்கள், வீடியோ எடுப்பது தொடர்பாக படிப்புகளும் தற்போது வந்துவிட்டதால், அதிலும் ஆர்வமாக பலர் படித்து வருகின்றனர்.
ஆர்வக்கோளாறால் ஆபத்து...
அரிமளம் ஒன்றியம் ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த வனிதா:- உலகமே கையடக்கத்தில் உள்ளது. எங்கள் கையில் செல்போன் இருந்தால் ஒரு கேமரா மேன் கூடவே இருப்பது போல் உணர்கிறோம். புதிய நண்பர்களை சந்திக்கும் போதும் விழாக்கள் மற்றும் புத்தாடை உடுத்தும் போதும் செல்போன் மூலம் எங்களை நாங்களே செல்பி எடுத்து அதை பாதுகாத்து வைத்துக் கொள்கிறோம். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும், மன நிறைவும் தருகிறது. நீண்டநாள் கழித்து கல்லூரி தோழியை திடீரென சந்திக்கும் போது செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துக்கொள்வோம். இந்தநிலையில் செல்பி மிகவும் நேர்த்தியாக வரவேண்டும். இயற்கை எழிலோடு வர வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் ஆர்வக்கோளாறில் ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்கும்போது அது சில நேரங்களில் ஆபத்தில் முடிகிறது. எனவே இதனை தவிர்க்க வேண்டும்.
மனத்திருப்தி இல்லை
கறம்பக்குடியை சேர்ந்த ஸ்டூடியோ உரிமையாளர் முத்து ராமலிங்கம்:- நாங்கள் 3 தலைமுறையாக புகைப்பட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இத்தொழிலில் உருவாகியுள்ள நவீன தொழில்நுட்பம் வேலை பளுவை குறைத்து உள்ளது. ஆனால் கருப்பு-வெள்ளை புகைப்படம் எடுத்த காலத்தில் இந்த தொழிலில் இருந்த மனத்திருப்தி தற்போது இல்லை. நவீன கருவிகள் இல்லாமல், கணினி பயன்படுத்தாமல், புகைப்படம் எடுத்து அதை பிரிண்டாக்கி தனது தனி திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு அன்றைய புகைப்பட கலைஞர்களுக்கு இருந்தது. புகைப்படங்களின் தரமும் தற்போது வெகுவாக குறைந்து விட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அந்த தாள் மற்றும் மையின் தரத்தால் இன்றும் நிலைத்து நிற்கின்றன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்புவரை தீபாவளி, பொங்கல், திருவிழா காலங்களில் புகைப்படம் எடுப்பதற்காக பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஸ்டூடியோவிற்கு வருவார்கள் அந்த நிலை இன்று இல்லை. முன்பெல்லாம் வீடுகளில் புகைப்படங்களை மாட்டி வைத்து அழகு படுத்துவார்கள். இன்று புகைப்படங்கள் செல்போன் மற்றும் கணினிக்குள் அடங்கி விட்டன.
செல்போன் ஒரு வரப்பிரசாதம்
புதுக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி கிருத்திகா:- ஸ்மார்ட் போன்கள் வந்தபின் அதிலே புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வரும் பழக்கம் அதிகரித்து விட்டது. நிகழ்ச்சிகளிலும் கேமராமேன்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், பலர் தங்களது செல்போனில் புகைப்படம் எடுப்பது வாடிக்கையாகிவிட்டது. மேலும் செல்பி எடுக்கவும் செல்போன் வசதியாக உள்ளது. அதிலும் புகைப்படங்கள் தெளிவாக எடுப்பதற்காக கேமராக்கள் கொண்ட செல்போன்களும் வந்துவிட்டன. இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் செல்போனிலே இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். எங்களை போன்றவர்களுக்கு இந்த காலத்தில் புகைப்படம் எடுப்பதற்கு செல்போன் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது. இதனால் எங்கு சென்றாலும், எப்போது வேண்டுமானாலும் செல்போனில் எளிதில் புகைப்படம் எடுக்க முடிகிறது. ஆனால் இதனை தனியாக பிரிண்ட் எடுத்து பிரேம் போட்டு வீட்டில் வைக்கும் பழக்கம் எங்களை போன்றவர்களிடம் கிடையாது. செல்போனில் 'ஸ்டோரேஜ்' நிரம்பிவிட்டால் உடனடியாக பழைய புகைப்படங்களை 'டெலிட்' செய்து விடுவது உண்டு. இதனால் முன்பு ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் அழிந்து விடும். அதனால் நினைவார்த்தமாக வைக்க முடியாது.
அழகிய நினைவலைகள்
அன்னவாசலை சேர்ந்த புகைப்பட கலைஞர் ரமேஷ்:- கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிலிம் போட்டு படம் எடுக்கும் கேமராக்கள்தான் அதிகளவில் இருந்தன. அந்த கேமராவை வைத்து படம் எடுத்தால் பிரிண்ட் போடும்போதுதான் படம் எப்படி வந்திருக்கிறது என்று தெரியும். எனவே ஒவ்வொரு 'கிளிக்'கும் மிக மிக முக்கியமானவை. எனவே பிலிம் ரோல் போட்டு கேமராவில் படம் பிடிப்பது திரில்லான அனுபவத்தை தரும். ஒரு படம் பதிவாகவில்லை என்றாலும் சிக்கல்தான். இந்த சூழலில்தான் புதிதாக டிஜிட்டல் தொழில்நுட்பம் புகுந்தது. இப்போது பல வாகையான கேமராக்கள் புழக்கத்துக்கு வந்து விட்டன. மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியால் புகைப்பட தொழிலில் பெரிய மாற்றங்கள் வந்து விட்டன. நினைவில் வைக்கும் பதிவாக இருந்த புகைப்படங்கள், அழகிய நினைவலைகளை தேக்கி வைக்கும் அழகோவியங்களாக மாறிவிட்டன. புகைப்படத்தில் இருக்கும் மக்களின் முகம் தவிர சுற்றுப்புறத்தையும் மிக அழகாக காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. பிலிம் ரோல் கேமராக்கள் படம் எடுப்பதை திரில் அனுபவத்தை கொடுத்தது என்றால், தற்போதைய கேமராக்கள் இடம் தேர்வு செய்வதையே சவாலாக மாற்றி உள்ளன.
பழைய புகைப்படங்கள்...
அரிமளம் ஒன்றியம் ராயவரத்தை சேர்ந்த பிரவீன்:- தொழில்நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க புகைப்பட தொழில் எளிதாகி விட்டது. முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பவர்கள் ஆல்பம் கேட்பார்கள். இப்போது யாரும் ஆல்பம் கேட்பதில்லை. பென்டிரைவில் ரைட் செய்து கொடுங்கள். நான் டி.வி.யில் போட்டு பார்த்துக் கொள்கிறோம் என்று கூறுகின்றனர். ஏ.ஐ. சாப்ட்வேர் என்ற ஆட்டோமேட்டிக் இன்டெலிஜென்ட் சாப்ட்வேர் வந்துவிட்டது. அந்த சாப்ட்வேரில் நாம் பழைய, கரையான் அரித்த, மிக மோசமான புகைப்படங்களை ஸ்கேன் செய்து வைத்து விட்டு நமக்கு எப்படி வேண்டும் என்று கணினியில் பதிவு செய்தால் போதும் தெளிவாக நமக்கு புதிய போட்டோ கிடைக்கும். நாம் எப்படி எதிர்பார்த்தமோ அதேபோல் புகைப்படம் கிடைக்கும். முன்பெல்லாம் பழைய புகைப்படங்களை புதுப்பிக்க பல நாட்கள் ஆகும். ஆனால் தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக 5 நிமிடத்தில் பழைய படத்தை புதிதாக, மிக நேர்த்தியாக உருவாக்க முடியும். தற்போது ஏ.ஐ.சாப்ட்வேர், போட்டோ சாப்ட்வேர் இரண்டையும் இணைத்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர். இதனால் நாம் 75 நிமிடத்தில் செய்ய வேண்டிய வேலை ஒரு நிமிடத்தில் முடிகிறது.
மனோ வியாதி
விராலிமலையை சேர்ந்த அரங்கநாதன்:- புகைப்படம் என்பது மொழியை கடந்து தங்களது உணர்வுகளை மற்றவர்களுக்கு உணரச்செய்வது. அப்படிப்பட்ட புகைப்படத்திற்கென ஒரு தினம் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தாலும் அதற்கு ஏற்றபடி புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வமும் இளைஞர்களிடையே இருந்து வருகிறது. பெரும்பாலானோர் இதனை தங்களது வளர்ச்சி பாதைக்கு பயன்படுத்தி கொண்டாலும் பலரும் இதனால் சீரழிந்து வருகின்றனர். அதற்கு காரணம் செல்பி என்ற மோகம் இளைஞர்களை ஆட்டிப்படைத்து வருகிறது. ஒரு நாளில் பெரும்பாலான நேரத்தை செல்போனை பயன்படுத்துவதிலேயே கழிக்கின்றனர். அதுமட்டுமின்றி ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்கிறேன் என்ற பெயரில் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களை அவ்வப்போது செய்தித்தாள்களில் படிக்கும்போது அறிய முடிகிறது. எனவே புகைப்படம் என்பது உணர்வை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர மனோ வியாதியாக மாறிவிடக்கூடாது.
சர்வதேச விருது
திருச்சியை சேர்ந்த சர்வதேச விருது பெற்ற புகைப்படகலைஞர் சிதம்பரம்:- நான் 10 வயது இருக்கும் போது எனது சித்தப்பா பாக்ஸ் கேமரா வைத்திருந்தார். நாங்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போது அதை வைத்து புகைப்படம் எடுப்போம். அதை பார்த்து எனக்கு புகைப்படம் எடுக்கும் ஆர்வம் வந்தது. 1991-ல் எனக்கு எனது தந்தை புதிய கேமரா வாங்கி கொடுத்தார். கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து பிலிம் ரோல் வாங்கி, ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிளில் காவிரி கரையோரம் சென்று இயற்கை காட்சிகளை படம் பிடித்து பழகிக்கொண்டேன். இதற்காக நிறைய பிலிம் ரோலை பயன்படுத்தினேன். தெருவோரங்களில் நடந்து செல்லும் போது நிறைய காட்சிகளை பார்ப்போம். ஆனால் அதை கேமராவில் பதிவு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டேன். பிறகு அதையே தொழிலாக மாற்றி திருமண விசேஷங்களுக்கு புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் கேமராவை மிகப்பெரிய பொக்கிஷமாக போட்டோ கிராபர்கள் பாதுகாத்து வருவார்கள். அதை தொடக்கூட விடமாட்டார்கள். மேலும் புகைப்பட கலையில் ஜம்பவானாக உள்ளவர்கள் அவ்வளவு எளிதில் அடுத்தவர்களுக்கு கற்றுக்கொடுக்க மாட்டார்கள். ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிகளில் பிலிம் ரோலில் படம் எடுப்பது என்பது அவ்வளவு கடினம். பிலிம் ரோலில் நான் எடுத்த தஞ்சை கோவில் படத்துக்காக எனக்கு சர்வதேச விருது கிடைத்தது. 2013-ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை நடத்திய கண்காட்சியில் எனது படம் 2-வது இடம் பிடித்தது. 2015-ம் ஆண்டு கிராம வாழ்க்கை குறித்து எடுத்த படம் முதல்பரிசு பெற்றது. தற்போது நவீன யுகத்தில் செல்போன் மூலமும், டிஜிட்டல் கேமரா மூலமும் சகட்டுமேனிக்கு புகைப்படங்களை எடுக்கிறார்கள். என்னதான் செல்போன் கேமரா பயன்படுத்தினாலும் தொழில் ரீதியான புகைப்பட கலைஞர்கள் இல்லாமல் அந்த நிகழ்ச்சி முழுமை பெறாது. ஆயிரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாததை ஒரு புகைப்படம் உணர்த்திவிடும். அதனால் எனது புகைப்படங்கள் மூலம் மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்கிறேன்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருப்பு வெள்ளைப்படங்கள்
இன்றைய நாளில், டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி, தாய்மார்கள் தினசரி தங்கள் குழந்தைகளின் செய்கைகளையும், குறும்பு நடவடிக்கைகளையும் இனிமையான நினைவுகளாக சேகரித்து வருகிறார்கள். கேமரா அப்ஸ்குரா, நெகட்டிவ் முறை, சில்வர் காப்பர் பிளேட், பேப்பர் பிலிம், டிஜிட்டல் கேமரா, ஸ்மார்ட்போன் என புகைப்படக்கலையில் பல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன. இருந்தாலும், இன்றும் சிறந்த புகைப்படமாக விளங்குவது, நமது பாட்டிமார்கள் காலம் காலமாக பொக்கிஷமாக காத்துவந்த, துருப்பிடித்த இரும்புப் பெட்டிக்குள், கறை படிந்த கண்ணாடிக்குள், கரையான் அரித்த அட்டையில் ஒட்டியிருக்கும் மறக்க முடியாத நினைவுகளை அளித்த அன்புக்குரியவரின் கருப்பு வெள்ளை புகைப்படம் தான்.
கேமரா காதலன்
கர்நாடக மாநிலம் பெலகாவி (மாவட்டம்) சாஸ்திரி நகரை சேர்ந்த புகைப்பட கலைஞர் ரவி ஹெங்கல் கூறியதாவது:-
நான் கடந்த 1987-ம் ஆண்டு புகைப்பட தொழிலை தொடங்கினேன். பி.யூ.சி. வரை படித்துள்ளேன். முதலில் சிறிய ஸ்டூடியோ கடையை திறந்து திருவிழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்தேன். பின்னர் புகைப்படங்கள் எடுப்பதில் தீவிரமாக ஆர்வம் காட்டினேன். அந்த தொழிலை நேசிக்கவும், காதலிக்கவும் தொடங்கினேன். அதுபோல், புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டிய ரூபா ராணியை திருமணம் செய்து கொண்டேன்.
எங்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தது. குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது, நானும், மனைவியும் கேமரா நிறுவனங்கள் பெயரை சூட்ட முடிவு செய்தோம். முதல் மகனுக்கு 'கெனான்' என்றும், 2-வது மகனுக்கு 'நிகான்' என்றும், 3-வது மகனுக்கு 'எப்சன்' என்றும் பெயர் சூட்டினோம். உறவினர்கள் என்னை, புத்தி இல்லையா?, முட்டாளா? என வசை பாடினார்கள். எனது தொழில் மீது இருந்த காதலால் அதுபற்றி நான் கவலைப்படவில்லை.
ஓரளவு வளர்ந்த பிறகு எனது மகன்களுக்கும் அந்த பெயர் பிடிக்கவில்லை. ஏனெனில் சக மாணவர்கள் அவர்களை கிண்டல் செய்தனர். நாளடைவில் எனது மகன்களும் புகைப்பட தொழில் மீதான எனது பக்தி, காதலை புரிந்து கொண்டு, கேமரா நிறுவனங்களின் பெயர்களை வைத்திருப்பதை பெருமையாக பேசி வருகிறார்கள். ரூ.71 லட்சத்தில் தரைதளம், முதல்தளம், 2-வது தளத்துடன் 'கேமரா' வடிவில் வீடு கட்டினேன். இதனை நானே வடிவமைத்தேன். ஒருபுறம் கேமரா ரோல் தொங்குவது, மத்தியில் லென்ஸ் என்று ஒரு கேமரா எப்படி இருக்குமோ, அப்படி எனது வீட்டை கட்டியுள்ளேன். எனது வீட்டுக்கு 'கிளிக்' என்று பெயர் சூட்டியுள்ளேன்.
தற்போது தொழில் நுட்ப வளர்ச்சியாலும், டிஜிட்டல் மயத்தாலும் புகைப்பட தொழில் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால் புகைப்பட கலைஞர்களும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தங்களை மாற்றி கொண்டுள்ளனர். நானும் தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு புகைப்பட தொழிலில் புதுமையை புகுத்தி வருகிறேன். என்ன தான் 'செல்பி' எடுத்து கொண்டு, செல்போனில் புகைப்படங்களை சேமித்து வைத்தாலும், புகைப்பட கலைஞர் எடுத்த புகைப்படங்களை வீட்டு சுவரில் மாட்டி அழகு பார்க்கும் போதும், திருமண ஆல்பத்தை எடுத்து பார்க்கும் போதும் பழைய நினைவுகளை அசைப்போட வைக்கும் தருணத்திற்கும், மகிழ்ச்சிக்கும் ஈடு இணை எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.