சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - விஜயகாந்த்


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - விஜயகாந்த்
x

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழக அரசு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை,

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழக அரசு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பள்ளியின் தாளாளரும், திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் விருத்தாசலம் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிஞ்சு குழந்தையை சிதைக்க முயன்ற மனித மிருகத்தின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. சமீபகாலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் குறித்த சம்பவங்களும், புகார்களும் அதிர்ச்சியை தருகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

பாலியல் குற்றங்களுக்கான தண்டனை குறித்த அச்சம் இல்லாதது தான் குற்றங்கள் பெருகுவதற்கு காரணமாகும். குழந்தைகளுக்கு எதிராக பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவோருக்கு போக்சோ சட்டத்தை விட அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க நினைப்பவர்களுக்கு அச்சமும், மரண பீதியும் ஏற்படும். ஆளுங்கட்சி கவுன்சிலர் என்று தெரிந்தும் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த சிறுமியின் தாயாரின் தைரியத்தை பாராட்டுகிறேன். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்தால் பெற்றோர்கள் அச்சமின்றி துணிந்து புகார் அளிக்க வேண்டும்.

மேலும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் சிறு வயதில் இருந்தே பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் சீண்டல்கள் ஏற்படும் போது உடனடியாக எந்த தயக்கமும் இன்றி மாணவிகளும் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் பாலியல் குற்றங்கள் தடுக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழக அரசு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story