சாத்தான்குளம் நீதிமன்றம் போலீசாரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
சாத்தான்குளம் நீதிமன்றம் போலீசாரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் வக்கீல் ஒருவர் மீது பொய்யான புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ததாக புகார் தெரிவித்தும், போலீசாரை கண்டித்தும் நேற்று ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
சாத்தான்குளம் வக்கீல்கள் சங்கம் சார்பாக ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பு சங்கத் தலைவர் ஜெகன் ஆண்டனி டென்னிசன் தலைமையில் வக்கீல்கள் நேற்று காலையில ்கோர்ட்டு புறக்கணிப்பு செய்து குவிந்தனர். பின்னர் அங்கு போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த வக்கீல்கள் சிவபாலன், அந்தோணி, ரமேஷ் குமார், சங்க செயலாளர் பவுன்ராஜ், சங்க பொருளாளர் செல்வ மகாராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வக்கீல்கள் குமரேசன், சுடலைமுத்து, ஈஸ்டர் கமல், குமரகுருபரன், கோபாலகிருஷ்ணன், மைக்கேல், வினோத், கணேஷ், பிளஸ்ஸிங், ஷீபாஐரின், ஹெஸ்பின், லத்தீஷ், பிருந்தா, கலையரசி, கவுசல்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
காரணம் என்ன?
இதுகுறித்து சங்க தலைவர் ஜெகன் அண்ட்னி டென்னிஸன் கூறுகையில்,
சாத்தான்குளம் வக்கீல் மணிகண்டன் மீது நாகர்கோவிலை சேர்ந்த தனியார் நிறுவனம் பொய்யான புகார் செய்துள்ளது. இதுகுறித்து அறிந்த நாங்கள்(வக்கீல்கள்) சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டரை நேரில் சந்தித்து, அந்த நிறுவனம் பொய்யான புகார் செய்துள்ளதை நிராகரிக்க வேண்டும் என்றும், வக்கீல் மீது வழக்கு பதிவு செய்ய கூடாது என்றும் கேட்டுக் கொண்டோம். ஆனால் அந்த பொய்யான புகார் அடிப்படையில் வக்கீல் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை வக்கீல்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
தொடர் போராட்டம்
மேலும், வக்கீல் மீதான வழக்கை ரத்து செய்யும் வரை காலவரையற்ற நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை(செவ்வாய்க்கிழமை) ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்குள் போலீசார் யாரையும் உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தும் போராட்டம் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும், என்றார்.