தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரம்


தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரம்
x

புதுக்கோட்டையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையொட்டி தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

கோடை காலம் எனப்படும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் புதுக்கோட்டையில் தற்போதே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காலையில் பனிப்பொழிவும், அதன்பிறகு வெயில் தாக்கமும் இருந்தது.

புதுக்கோட்டை நகரில் பொதுமக்கள் சிலர் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடைகளை பிடித்தபடி நடந்து செல்வதை காணமுடிகிறது. மேலும் இளம்பெண்கள் சிலர் துப்பட்டாவால் தலையை மூடியபடியும் செல்கின்றனர். கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

தர்பூசணி பழங்கள்

இதற்கிடையில் கோடை வெயிலில் தாகம் தீர்க்கும் பழமாகவும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதுமான தர்பூசணி பழங்கள் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. சாலையோரங்களில் தர்பூசணி பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் பலரும் தர்பூசணி பழங்களை விரும்பி சாப்பிடுகின்றனர். துண்டு, துண்டாக வெட்டப்பட்டு ஒரு தட்டில் ரூ.10-க்கும், முழு பழம் கிலோ ரூ.20-க்கும் விற்பனையாகிறது.

இதேபோல் பழ ஜூஸ் வகைகளும் விற்பனை அதிகரித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பழ ஜூஸ்களையும் பொதுமக்கள் குடித்து வருகின்றனர். தற்போது வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கிற நிலையில் கோடை காலத்தில் இதைவிட அதிகமான வெயில் இருக்குமோ? என எண்ணி பொதுமக்கள் கலக்கமடைந்து உள்ளனர்.


Next Story