முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது - அமைச்சர் ரகுபதி


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது - அமைச்சர் ரகுபதி
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில், சட்டத்தின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது என்று மனித உரிமைகள் தின கொண்டாட்டத்தில் அமைச்சர் ரகுபதி பேசினார்.

மனித உரிமைகள் தினம்

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், சர்வதேச மனித உரிமைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் கே.விஜயகார்த்திகேயன், நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களை வரவேற்றார்.

சட்டத்தின் ஆட்சி

கவுரவ விருந்தினராக கலந்துகொண்டு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:- மனித உரிமை என்பது அவரவர்களுடைய பிறப்புரிமை. சமூகநீதி, மாநில சுயாட்சி, மத நல்லிணக்கம் என்பதை நோக்கி தமிழக அரசு முன்னேறி வருகிறது. மனித உரிமைகளின் பாதுகாவலராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உள்ளது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டத்தின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது.

சட்டத்தின் பலன் ஏழை-எளிய மக்களுக்கு கிடைக்க செய்வதற்கான மக்களின் அரசாக தமிழக அரசு விளங்குகிறது. இணையவழி குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் பெருகி வரும் நிலையில் சட்டங்களை நவீனப்படுத்தவேண்டும். அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரிகள் தொடங்கும் முனைப்பில் அரசு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில், தமிழ்நாடு காலநிலை மாற்றத்துக்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நார்வேயை சேர்ந்த ஐ.நா. முன்னாள் சார்பு செயலாளர் எரிக் சோல்ஹிம், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தூதர் ஜூடித் ரேவின்தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன், சர்வதேச நீதி குழுமத்தின் (ஐ.ஜே.எம்.) மாநில திட்ட இயக்குனர் டி.குறளமுதன், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் பதிவாளர் என்.முரளிதரன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதையடுத்து, 2025-ம் ஆண்டுக்குள் அனைத்து வடிவங்களிலும் குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழித்துகட்டுவது தொடர்பாக சட்ட நிபுணர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற குழு விவாதம் நடந்தது.


Next Story