வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது
கீரனூர் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
6 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி ஊராட்சியில் அண்ணா நகர் பகுதியில் குருவிக்காரர்களுக்கு என்று காலனி வீடு கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்டது. இதில் சிலர் வீடுகளை புதுப்பித்து வைத்துள்ளனர். சிலர் அதே வீட்டில் தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு பாபு என்பவரின் வீட்டின் மேற்கூரையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாபு (வயது 40), அவரது மனைவி ரேவதி (35), குழந்தைகள் எப்சியால் (15), லீதியா (13), எக்சல் (10), ஷாலு (4) ஆகியோர் மீது சிமெண்டு பூச்சுகள் விழுந்ததில் காயம் அடைந்தனர்.
வீடுகள் கட்டி கொடுக்கப்படும்
இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் சின்னத்துரை எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினர். மேலும் வீட்டை பார்வையிட்ட அதிகாரிகள் உடனடியாக 7 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.