வீட்டின் மேற்கூரை, சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் பலி
கீழ்வேளூர் அருகே வெவ்வேறு இடங்களில் வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் பலியானார்கள்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே வெவ்வேறு இடங்களில் வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் பலியானார்கள்.
வீட்டை இடிக்கும் பணி
நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் ஆதமங்கலம் ஊராட்சி, தென்மருதூர் கிராமம், கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பக்கிரிசாமி .விவசாயி .இவருடைய மனைவி அன்னப்பட்டு (வயது65). இவர்கள் தங்களது 3-வது மகன் மணிகண்டன் என்பவர் வீட்டில் வசித்து வந்தனர்.
பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மணிகண்டனுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிய வீடு கட்டும் பணிக்காக பழைய வீட்டை இடிக்கும் பணியை நேற்று முன்தினம் தொடங்கி உள்ளனர்.
மேற்கூரை இடிந்து விழுந்தது
இந்த நிலையில் நேற்று காலை அன்னப்பட்டு பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருந்த வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த அன்னப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வலிவலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
.இதேபோல் கீழ்வேளூர் அருகே கொளப்பாடு, பையூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி மலர்க்கொடி (62). நேற்று முன்தினம் பெய்த மழையில் மலர்க்கொடி வீட்டின் மண்சுவர் நனைந்து ஊறிப்போய் இருந்தது. நேற்று காலை மலர்க்கொடி வீட்டுக்குள் சாப்பிட்டு கொண்டிருந்தார்.அப்போது வீட்டின் சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே மலர்க்கொடி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீழ்வேளூர் அருகே வெவ்வெறு இடங்களில் வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர் இடிந்து விழுந்து 2 மூதாட்டிகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.