மழைநீர் வடிகால் வாய்க்கால் உயரத்திற்கு சாலையை உயர்த்த வேண்டும்
கொரடாச்சேரியை அடுத்து கிளரியம் கிராமத்தில், மழைநீர் வடிகால் வாய்க்கால் உயரத்திற்கு சாலையை உயர்த்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரியை அடுத்து கிளரியம் கிராமத்தில், மழைநீர் வடிகால் வாய்க்கால் உயரத்திற்கு சாலையை உயர்த்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைநீர் வடிகால்
கொரடாச்சேரியை அடுத்த கிளரியம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மழைநீர் வடிந்து செல்வதற்காகவும், சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு சாலையின் வடக்கு பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது.
அவ்வாறு கட்டப்பட்ட மழைநீர் வடிகாலின் மேல்மட்டம் சாலையின் மட்டத்திலிருந்து 1 அடி உயரத்தில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை அவரவர் வீடுகளின் வளாகத்திற்குள் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
உயர்த்தி தர வேண்டும்
இந்த நிலை கடந்த 4 மாதங்களாக இருந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் வாகனங்களை எதிர்வீட்டு வாசல் அல்லது வேறு எங்கேயாவது கொண்டுசென்று நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் வாகனங்கள் திருட்டுப்போகவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிகால் வாய்க்காலின் உயரத்திற்கு தார்சாலையை சற்று உயர்த்தி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கும், நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் மனு அனுப்பி உள்ளனர்.