சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவர் வீட்டை சூறையாடிய உறவினர்கள்


சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவர் வீட்டை சூறையாடிய உறவினர்கள்
x

ராமநத்தம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதில், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவர் வீட்டை உறவினர்கள் சூறையாடினர்.

கடலூர்

ராமநத்தம்,

அரியலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேள்வி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் மகள் கவுசல்யா(வயது 27). இவருக்கும் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த கீழ் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜாராம்(30) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த கவுசல்யா, வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார்.

கணவர் குடும்பத்தினர் தலைமறைவு

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று முன்தினம் கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ராஜாராம் குடும்பத்தினர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கவுசல்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வீடு சூறை

இதையடுத்து அடக்கம் செய்தவற்காக கவுசல்யாவின் உடலை உறவினர்கள் கீழ் ஆதனூருக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர்கள் கவுசல்யாவின் உடலை கணவர் ராஜாராமின் வீட்டின் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கவுசல்யாவை கொன்று விட்டதாகவும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி கோஷம் எழுப்பினர்.

மேலும் ஆத்திரம் தீராத அவர்கள் ராஜாராமின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த டி.வி., மின்விசிறி, கிரைண்டர், மிக்சி, கியாஸ் அடுப்பு, ஜன்னல் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதுபற்றி அறிந்த ராஜாராமின் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர்.

பரபரப்பு

மேலும் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவ்யா மற்றும் ராமநத்தம் போலீசார் விரைந்து வந்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

பின்னர் கவுசல்யாவின் உறவினர்களிடம் உங்களது கோரிக்கை குறித்து புகார் தெரிவியுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று, கவுசல்யாவின் உடலை அடக்கம் செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story