சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியல்
செம்பட்டியில் தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த பழைய செம்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மனைவி நாகேஸ்வரி. இவர்கள் திருப்பூரில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகள் மணிஷா (வயது 16), தனது தாத்தா-பாட்டியுடன் வசித்து வந்தார். சின்னாளப்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த அவர் சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதையடுத்து சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே சிறுமி மணிஷாவின் உடல் நேற்று திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று திரண்டு வந்தனர். சிறுமியின் உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்தனர். அதோடு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து திண்டுக்கல் வடக்கு போலீசார் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் சிறுமியின் உறவினர்கள் மறியலை கைவிட்டு உடலை வாங்க சென்றனர்.