என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட துரையின் உறவினர்கள் போராட்டம் - போலீசார் பேச்சுவார்த்தை


என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட துரையின் உறவினர்கள் போராட்டம் - போலீசார் பேச்சுவார்த்தை
x

என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட துரையின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் அருகே தைல மர காட்டுப்பகுதியில் துப்பாக்கியுடன் 2 பேர் பதுங்கியிருப்பதாக ஆலங்குடி போலீசாருக்கு நேற்று மதியம் தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்தையன், சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் உள்பட போலீஸ்படையினர் அந்த காட்டுப்பகுதிக்கு சென்று, தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்கு சுற்றித்திரிந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அதிர்ச்சியடைந்தனர். இதில் ஒருவர் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டுள்ளார். இதில் அந்த குண்டு யார் மீதும் படவில்லை. இருப்பினும் போலீசார் தன்னை நெருங்குவதை அறிந்த அந்த நபர், தன்னிடம் இருந்த பட்டாக்கத்தியால் போலீசாரை தாக்கினார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கத்திற்கு வலது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தற்காப்புக்காக தான் வைத்திருந்த துப்பாக்கியால், அந்த நபரை நோக்கி 3 ரவுண்டு சுட்டார். இதில் ஒரு தோட்டா அந்த நபரின் இடது காலிலும், மற்றொரு தோட்டா மார்பு பகுதியிலும் புகுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் அந்த நபர் உயிரிழந்தார். அவருடன் இருந்த மற்றொரு நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த நபர் குறித்து போலீசார் விசாரித்தபோது, அவர் திருச்சி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி துரை என்ற துரைசாமி (42 வயது) என்பது தெரியவந்தது. அவர் மீது 4 கொலை வழக்குகள், கொலை மிரட்டல், வழிப்பறி உள்பட 64 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடிகள் பட்டியல் கொண்ட குற்ற சரித்திர பதிவேட்டிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. புதுக்கோட்டையில் கணேஷ்நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கொலை வழக்கில் ரவுடி துரையின் பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் முத்தையன் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின் திருச்சி சரக டி.ஐ.ஜி. மனோகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பட்டாக்கத்தி வெட்டில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கத்தை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலை 10 மணியளவில் பிரேத பரிசோதனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரவுடி துரையின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இன்று காலை முதலே புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் திட்டமிட்டு துரையை அழைத்துச் சென்று என்கவுண்டர் செய்துள்ளனர் என்றும் இந்த சம்பவத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனிடையே யார் முன்னிலையில் பிரேத பரிசோதனையை நடத்த வேண்டும் என்பதில் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இது காவல் மரணம் இல்லை என்பதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினால் போதும் என்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தைச் சுற்றி 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story