ஈரோட்டில் கொட்டி தீர்த்த மழை; மின்தடையால் பொதுமக்கள் அவதி


ஈரோட்டில் கொட்டி தீர்த்த மழை; மின்தடையால் பொதுமக்கள் அவதி
x

ஈரோட்டில் மழை கொட்டி தீர்த்தது. மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

ஈரோடு

ஈரோட்டில் மழை கொட்டி தீர்த்தது. மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

மழையில் நனைந்தனர்

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. நேற்று பகலிலும் வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே தயக்கம் காட்டினர்.

இந்தநிலையில் மாலையில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. 6 மணிஅளவில் மழை பெய்ய தொடங்கியது. இடைவிடாமல் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் சென்றவர்கள் மழையில் நனைந்தனர். பலர் மழைக்கு ஆங்காங்கே ஒதுங்கினர். ஆனால் நீண்ட நேரமாக தூறிக்கொண்டே இருந்ததால், அவர்களும் நனைந்தபடியே புறப்பட்டு சென்றனர்.

ரெயில் நிலையம்

ஈரோடு நாச்சியப்பா வீதி, பெருந்துறைரோடு, சுவஸ்திக்கார்னர், காந்திஜிரோடு, ஈ.வி.என்.ரோடு, காவிரிரோடு, நேதாஜிரோடு, ஆர்.கே.வி.ரோடு, சத்திரோடு, நசியனூர்ரோடு என ஈரோடு மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. குறிப்பாக நாச்சியப்பா வீதி, காந்திஜிரோட்டில் வாகனங்கள் ஆமை போல மெதுவாக ஊர்ந்து சென்றதை காண முடிந்தது.

கொங்காலம்மன் கோவில் வீதி, கோட்டை முனியப்பன் கோவில் பகுதி, சின்ன மார்க்கெட் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் மக்கள் சிரமம் அடைந்தனர். ஈரோடு ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர்களில் மழைநீர் தேங்கி நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர். ரெயில் ஏறுவதற்காக வேகமாக சென்ற பயணிகள் தவறி விழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மின்தடை

ஈ.வி.என்.ரோடு, ரெயில் நிலையம் ரோடு, காந்திஜிரோடு, காவிரிரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அங்கு தண்ணீர் நிரம்பி சென்றதால் நடந்து சென்ற மக்கள், குழி இருப்பதுகூட தெரியாமல் சிரமத்துடன் கடந்து சென்றனர்.

மழை காரணமாக ஈரோடு மாநகரில் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக மின் வினியோகம் இல்லாமல் மக்கள் அவதி அடைந்தனர். ஈரோடு பஸ் நிலையம், வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், சூரம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

சோலார்

இதேபோல் சோலாரில் மாலை 6.30 மணி அளவில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. பலத்த காற்றும் வீசியது.

இந்த மழையானது சுமார் ½ மணி நேரத்துக்கு பதிலாக பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் வெண்டிபாளையம், கஸ்பாபேட்டை, 46 புதூர், லக்காபுரம், நஞ்சை ஊத்துக்குளி, மொடக்குறிச்சி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.


Related Tags :
Next Story