ரவுடி ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை


ரவுடி ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் கோர்ட்டில் கையெழுத்துபோட்டு விட்டு திரும்பி வந்த ரவுடியை பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது. அவருடன் வந்த நண்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

கோயம்புத்தூர்

கோவை,

கோவையில் கோர்ட்டில் கையெழுத்துபோட்டு விட்டு திரும்பி வந்த ரவுடியை பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்தது. அவருடன் வந்த நண்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

கோர்ட்டு அருகே பயங்கரம்

கோவை கோர்ட்டு வளாகம் வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை எப்போதும் பரபரப்பாக காணப்படும். வக்கீல்களும், குற்றம்சாட்டப்பட்டவர்களும், சாட்சிகளும் கோர்ட்டை நோக்கி காலையிலேயே செல்வார்கள்.

கோர்ட்டின் சுற்றுச்சுவரை அடுத்த கோபாலபுரத்தில் வக்கீல்கள் அலுவலகம் நிறைந்து காணப்படுகிறது. இந்த பகுதியில் தான் நேற்று கோர்ட்டில் ஆஜராகிவிட்டு திரும்பிய ரவுடியை ஓட, ஓட வெட்டி ஒரு கும்பல் படுகொலை செய்ததது.

பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரவுடி

கோவையை அடுத்த கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (வயது 22) ரவுடி. இவர் மீது துடியலூர், சரவணம்பட்டி, கோவில்பாளையம் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த கண்ணப்ப நகரை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் என்பவரது கொலை தொடர்பாக, கோகுல் மற்றும் அவருடைய நண்பர்கள் 5 பேர் மீது சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலை வழக்கு

இதற்கிடையே கோகுல் உள்பட 5 பேர் சென்னை கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே கோகுல் ஜாமீனில் வெளியே வந்தார்.

குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கு விசாரணை கோவை 3-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.

கோர்ட்டுக்கு வந்தார்

கோகுல் கடந்த சில நாட்களாக வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து கடந்த வாரம் கோர்ட்டில் கோகுல் ஆஜர் ஆனார்.

இந்தநிலையில் நேற்று கோகுல் தனது நண்பரான மனோஜ் என்பவருடன் கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் அவர் தனது வக்கீலுடன் உள்ளே சென்று கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்தார்.

தொடர்ந்து கோகுல், மனோஜ் ஆகியோர் கோர்ட்டுக்கு பின்புறம் கோபாலபுரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் காலை 11 மணியளவில் டீ குடிக்க சென்றனர்.

ஓட, ஓட விரட்டி கொலை

அப்போது அவர்களை, 4 பேர் கும்பல் பின் தொடர்ந்து வந்தனர். அந்த நபர்கள் கோர்ட்டிற்கு வந்தவர்களாக இருப்பார்கள் என நினைத்து கோகுலும், மனோஜூம் டீ கடைக்கு நடந்து சென்றனர்.

கடையின் அருகே அவர்கள் பேசி கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 4 பேரும், கோகுலின் அருகே வந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் கோகுலை சுற்றிவளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.

கோகுலும், அவரது நண்பரும், அந்த கும்பலின் பிடியில் இருந்து தப்பி ஓடினார்கள். இருப்பினும், அந்த கும்பல் நடுரோட்டில் ஓட, ஓட விரட்டி கோகுலை வெட்டியது.

இதில் அவரது கழுத்தில் வெட்டு விழுந்தது. உடனே மனோஜ், அவர்களிடம் இருந்து கோகுலை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அந்த கும்பல், மனோஜையும் வெட்டினர். இதில் தலை மற்றும் கால்களில் வெட்டுபட்ட மனோஜ் மேற்கொண்டு ஓட முடியாமல் கீழே விழுந்து துடித்துக்கொண்டிருந்தார்.

இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கோகுல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தப்பிய கொலையாளிகள்

தாங்கள் வந்த நோக்கத்தை நிறைவேற்றிய கொலை கும்பல், எந்த சம்பவமும் நடைபெறாததுபோன்று நிதானமாக நடந்து சென்றனர். பின்னர் அந்த கும்பல் தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றனர்.

பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த படுகொலை நடைபெற்றது. கொலை சம்பவத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். சிலர் அந்த பகுதியை விட்டு ஓடினார்கள்.

சினிமா காட்சியை மிஞ்சும் வகையில் நடந்த இந்த காட்சியை சிலர், ஓரமாக ஒதுங்கி நின்றபடி தாங்கள் வைத்திருந்த செல்போனில் படம்பிடித்தனர்.

போலீசார் விசாரணை

இந்த கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், உடனடியாக அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

கொலை நடந்த பகுதியில் செறுப்புகள் மற்றும் கொலயைாளிகள் பயன்படுத்திய கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களும் சிதறிக்கிடந்தன.

போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சந்தீஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

தனிப்படை அமைப்பு

கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கொலையான கோகுலின் உடலை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தலையில் வெட்டு காயம் அடைந்த கோகுலின் நண்பர் மனோஜ் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்க அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பழிக்குப்பழியா?

கடந்த 2 ஆண்டுகளுக்கு கொல்லப்பட்ட ரவுடி குரங்கு ஸ்ரீராமின் கொலைக்க பழிதீர்க்க இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதில் குரங்கு ஸ்ரீராமின் கூட்டாளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து குரங்கு ஸ்ரீராமின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் 5 பேரை பிடித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கத்தியுடன் திரிந்த கோகுல்

தான் கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ரவுடி கோகுல் இருந்துள்ளார். இதனால் எப்போதும் கத்தியுடன் சுற்றி திரிந்துள்ளார்.

அவர் கொலை செய்யப்பட்டு, உடல் தரையில் கிடந்தபோது அவரது பேன்ட் பாக்கெட்டில், அவர் தனது பாதுகாப்புக்கு வைத்து இருந்த கத்தியை போலீசார் கைப்பற்றினர். மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தை சிலர் செல்போனில் படம் எடுத்துள்ளனர். அதனையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பரபரப்பு

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் அடுத்தடுத்து 2 நாட்களில் 3 கொலை சம்பவங்கள் நடந்து இருப்பது கோவை மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story