குடிநீரில் புழுக்கள் வந்ததால் பொதுமக்கள் திடீர் மறியல்
குடிநீரில் புழுக்கள் வந்ததால் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
குன்னம்:
பொதுமக்கள் மறியல்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தில் வடக்கு தெரு, தெற்கு தெரு, நடுத்தெரு, மேற்கு தெரு, காலனி தெரு ஆகிய தெருக்கள் உள்ளன. இந்த ஊரில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு கிராம நிர்வாக அலுவலகம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலனி தெரு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது குடிநீர் புழுக்கள் இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த காலனி தெரு மக்கள், எங்கள் பகுதியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இல்லை. கடந்த ஒரு மாதமாக தெரு விளக்குகள் எரியவில்லை. அடிக்கடி தண்ணீரில் புழுக்கள் கலந்து வருகிறது என்று கூறி, ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரியலூர்-பெரம்பலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் மற்றும் மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் காலனி தெரு பகுதிகளுக்கு வரும் குடிநீர் குழாய் உடைந்துள்ளதால் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வந்துள்ளது. உடனடியாக குடிநீர் குழாய் மாற்றி அமைக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதன்பேரில், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் அரியலூர்-பெரம்பலூர் சாலையில் சுமார் அரை மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.