பெரியகுளம் கண்மாய் பகுதியை சீரமைக்க நிதி ஒதுக்கியதற்கு பொதுமக்கள் வரவேற்பு
சிவகாசி பெரியகுளம் கண்மாய் பகுதியை சீரமைக்க ரூ.5 கோடியே 30 லட்சத்தை அரசு ஒதுக்கியதற்கு பொதுமக்கள் வரவேற்றதுடன் பணிகளை விரைவில் தொடங்க வலியுறுத்தி உள்ளனர்.
சிவகாசி,
சிவகாசி பெரியகுளம் கண்மாய் பகுதியை சீரமைக்க ரூ.5 கோடியே 30 லட்சத்தை அரசு ஒதுக்கியதற்கு பொதுமக்கள் வரவேற்றதுடன் பணிகளை விரைவில் தொடங்க வலியுறுத்தி உள்ளனர்.
பெரியகுளம் கண்மாய்
சிவகாசி பெரியகுளம் கண்மாய் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்தது. அதன் பின்னர் நீர் வரத்து பாதைகள் அடைப்பு ஏற்பட்டு கண்மாய் நீர்வரத்து இன்றி விளையாட்டு மைதானம் போல் மாறியது. இந்த நிலையில் இந்த கண்மாயை மீட்க சிவகாசி பகுதி தொழிலதிபர்கள் பசுமை மன்றத்தை தொடங்கி கண்மாயை மீட்டு எடுத்தனர்.
கண்மாயின் மையபகுதியில் மியாவாக்கி அமைக்கப்பட்டு மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பருவ மழையின் போது கண்மாய் நிரம்பி நகரின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. இந்த நிலையில் கண்மாயின் சுற்றுப்பகுதியில் மரங்களை நட்டு வைத்து கரையினை பலப்படுத்தும் பணிகள் செய்து முடிக்கப்பட்ட நிலையில் கம்பி வேலியும் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
நிதி ஒதுக்கீடு
இந்த நிலையில் தமிழக அரசு சிவகாசி பெரியகுளம் கண்மாயை மேம்படுத்த ரூ.5 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. இந்த நிதியை கொண்டு பல்வேறு வளர்ச்சி பணிகளை உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
கண்மாய் பகுதியில் பூங்கா, நடை பயிற்சி தளம், மின் விளக்கு அலங்காரம் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளையும் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. பெரிய குளம் கண்மாய் பகுதியை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கியதை சிவகாசி பகுதி சமூக ஆர்வலர்கள் பலர் வரவேற்று உள்ளனர். கண்மாய் மேம்பாட்டு பணியினை விரைவில் தொடங்கி தரமாக முடிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதே போல் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 3 இடங்களில் புதிய பூங்காக்களை அமைக்க ரூ.1 கோடியே 75 லட்சமும், ஆயில்மில் காலனியில் உள்ள பூங்காவை மேம்படுத்த ரூ.87 லட்சத்து 50 ஆயிரமும் அரசு ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.