ஆழ்துளை கிணற்றை சீரமைத்த ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகை


ஆழ்துளை கிணற்றை சீரமைத்த ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகை
x

ஆழ்துளை கிணற்றை சீரமைத்த ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

தண்ணீர் கிடைக்காமல் சிரமம்

மண்ணச்சநல்லூர் தாலுகா, மேல்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டியபுரம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து புலிவலம் வரை செல்லும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட்டுக்குடிநீருக்காக ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார் பழுதடைந்ததால், குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைபட்டது. மேலும் பாண்டியபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்று குழாயிலும் தண்ணீர் வராததால் குடிநீர் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

3 கிலோ மீட்டர் தூரம்...

மேலும் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக தினமும் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று ஈச்சம்பட்டி கிராமத்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வந்தனர். கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்று குடிநீர் குழாயை சீரமைத்து தரும்படி அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவியிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாண்டியபுரம் பகுதியில் உள்ள 80 அடி கொண்ட ஆழ்துளை கிணற்று குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது 150 அடியில் ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

முற்றுகை

இதனையறிந்த பொதுமக்கள் குறைந்த அளவு தரைமட்டத்தில் குழாய் அமைத்தால் போதிய தண்ணீர் கிடைக்காமல் சிறிது நேரத்தில் தண்ணீர் வினியோகம் தடைபடும். எனவே அதிக ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் பொருத்த வேண்டும் என்று கூறி, ஆழ்துளை கிணறு குடிநீர் குழாய் அமைக்கும் பணி செய்த ஊழியர்களை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி செயலாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஓரிரு நாட்களில் அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story