காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
காலிக்குடங்களுடன் முற்றுகை
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் உள்ள துறைமங்கலம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை சேர்ந்த பொதுமக்களில் சிலருடன், பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் குடியிருப்பில் கடந்த ஒரு மாதமாக சரியான முறையில் தண்ணீர் வினியோகம் இல்லை. முறையாக தண்ணீர் வினியோகிக்க கோரி கடந்த 7-ந்தேதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 2 நாட்களுக்குள் தண்ணீர் பிரச்சினையை சரி செய்து விடுவதாக கூறினர். ஆனால் இதுவரைக்கும் அவர்கள் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்யவில்லை.
கலெக்டர் தலையிட்டு...
எனவே இந்த பிரச்சினையில் கலெக்டர் தலையிட்டு குடியிருப்புக்கு போதிய அளவு தண்ணீரை முறையாக வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் குடியிருப்புக்கு குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி, பஸ் நிறுத்தம் உள்ளிட்டவையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். பின்னர் அவர்களில் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு கொடுத்துவிட்டு வந்து கலைந்து சென்றனர்.
குன்னம் தாலுகா, அகரம்சீகூரை சேர்ந்த பொதுமக்களில் சிலர் மாதர் சங்கம் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அதில், அகரம்சீகூர் எல்லை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
தமிழ் வழியில் கும்பாபிஷேகம்
அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக கூறினர். ஆனால் இன்னும் அந்த டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படவில்லை. மேலும் கடையின் மதுபானக்கூடம் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் முதலாளி, அக்கட்சியினருடன் வந்து கொடுத்த மனுவில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இனி தமிழ் வழியில்தான் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடத்த வேண்டும். மீறினால் கோவில் நிர்வாகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் அருகே இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில், பெரியசாமி மலைக்கோவில் ஆகிய கோவில்களில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தையும் தமிழ்வழியில் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.