ஆக்கிரமிப்பை அகற்ற கோரி நடக்க இருந்த போராட்டம் வாபஸ்
சின்னசேலத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி நடக்க இருந்த போராட்டம் வாபஸ் செய்யப்பட்டது.
சின்னசேலம்,
சின்னசேலம் தாலுகா வடக்கனந்தல் பேரூராட்சிக்குட்பட்ட அக்கராயப்பாளையம் மதுரை வீரன் கோவில் தெரு காந்திநகர் பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வந்த சுடுகாடு மற்றும் சுடுகாட்டு பாதையை தனி நபர் ஆக்கிரப்பு செய்துள்ளார். இதனை கண்டித்து அனைத்து மக்கள் விடுதலைக் கட்சி சார்பில் நாளை (திங்கட்கிழமை) கலெக்டர் அலுவலகம் முன்பு ஒப்பாரி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சின்னசேலம் தாசில்தார் இந்திரா, காந்திநகர் பகுதி மக்கள் மற்றும் அனைத்து மக்கள் விடுதலைக்கட்சி நிர்வாகிகளை அழைத்து தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தினார்.
கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுடுகாட்டு பாதையை தார் சாலையாக அமைப்பது, சுடுகாட்டை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்று கொண்ட அனைத்து மக்கள் விடுதலைக்கட்சி நிர்வாகிகள் ஒப்பாரி போராட்டத்தை கைவிடுவதாக கூறினர். இந்த கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர் பாலகணபதி, கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுகத் அலி, வடக்கனந்தல் பேரூராட்சி தலைமை எழுத்தர் வைத்தியலிங்கம், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் தோப்புக்காரன், அனைத்து மக்கள் விடுதலைக் கட்சி மாநில தலைவர் பூபதி, பொதுச் செயலாளர் தினேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தேசிங்கு ராஜா, பிரதிநிதிகள் வீரகுமார், பெரியசாமி, மனோகரன், வீராசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.