பிரதமரின் எண்ணம், செயல்திட்டம் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாகவே உள்ளது - அண்ணாமலை
பிரதமரின் எண்ணம், செயல்திட்டம் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாகவே உள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று கொடூரமான முறையில் கன்னையா லால் வெட்டிக்கொல்லப்பட்டார். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக தனது சமூக வலைத்தளத்தில் கன்னையாலால் பதிவு செய்ததால், அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து என்.ஐ. ஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, என்.ஐ.ஏ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
கன்னையாலால் கொலை சம்பவபத்தால் பெரும் மத பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த கொடூரமான கொலை சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த கொடூரமான கொலை சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் அவர்களது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு தடம்புரண்டமைக்கு அம்மாநில முதல்வர் மற்றவர்களைக் குறை சொல்கிறார்.
நமது பாரத பிரதமரின் எண்ணம், செயல்திட்டம் மற்றும் செயல்பாடுகள் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாகவே உள்ளது. ஆனால் தேச வளர்ச்சியை வெறுக்கும் இரட்டை முகம் கொண்டவர்களோ தொடர் தோல்வியிலிருந்து மீளப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு வருகிறார்கள்!" என்று கூறியுள்ளார்.