பாதிரியாரை காரில் கடத்தி நகை, பணம் பறிப்பு-போலீசார் விசாரணை
குற்றாலத்தில் பாதிரியாரை காரில் கடத்தி நகை, பணம் பறித்து சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
குற்றாலம் அருகே உள்ள வல்லம் குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சார்லி அமல் சிங் (வயது 35). இவர் மதுரையில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளாா். இவர் நேற்று முன்தினம் இரவில் தனது காரில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குற்றாலத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்த 4 பேர் சார்லி அமல்சிங் காரில் லிப்ட் கேட்டு ஏறிச் சென்றனர். கார் சிறிது தூரம் சென்றதும் பின் சீட்டில் இருந்த ஒருவர் திடீரென பாதிரியாரின் வாயை பொத்தி காரை நிறுத்துமாறு மிரட்டினார். காரை நிறுத்தியதும் அவரை டிரைவர் சீட்டில் இருந்து பின் சீட்டுக்கு இழுத்து அமர செய்தனர். அதன் பிறகு அவர்களில் ஒருவர் காரை ஓட்டிக் கொண்டு சென்றார். அப்போது சார்லி அமல் சிங்கின் கண்களை துணியால் கட்டி ஐந்தருவி அருகே காரை நிறுத்தி கீேழ இறங்க செய்தனர்.
பின்னர் அவரை மிரட்டி ரூ.10 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.29 ஆயிரத்தை மர்மநபர்களின் ஒருவரது வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளனர்.
மேலும் சார்லி அமல் சிங் அணிந்திருந்த சுமார் 68 கிராம் தங்க நகைகளை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் குற்றாலம் போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.