தக்காளி விலை மீண்டும் கிடுகிடு உயர்வு
தக்காளி விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்தது.
தக்காளி விலை உயர்வு
தமிழர்களின் அன்றாட உணவில் தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. புளிப்பு சுவை சேர்க்க புளிக்கு மாற்றாக பயன்படுத்த தொடங்கிய தக்காளி சாம்பார், ரசம், கூட்டு பொரியல், தக்காளி தொக்கு என அனைத்து வகையான உணவுகளிலும் இடம் பெற தொடங்கிவிட்டது. தக்காளியின் விலை சமீபகாலமாக உச்சம் தொட்டு வருவதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர். வழக்கமாக காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையேற்றம் சில நாட்களுக்கு பிறகு வரத்து அதிகரிக்க தொடங்கும்போது கட்டுக்குள் வந்துவிடும். ஆனால் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. வரத்து பெருமளவு குறைந்ததே தக்காளி விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த வாரத்தில் கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்ட தக்காளி, நேற்று மேலும் விலை உயர்ந்து காந்தி மார்க்கெட்டில் கிலோ ரூ.150-க்கு விற்பனையானது.
கிலோ ரூ.200-க்கு விற்பனை
மளிகை கடைகளிலும், தெருக்களிலும் சில்லறை விற்பனை விலையில் கிலோ ரூ.160, ரூ.170 என்ற விலைகளில் விற்றனர். அதிலும் உச்சகட்டமாக பொன்மலை சந்தையில் நேற்று காலை ஒரு கிலோ தக்காளி ரூ.200 என கூவி, கூவி விற்றனர். இதை கண்ட பெரும்பாலான இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து, தக்காளி வாங்கும் முடிவையே கைவிட்டு புறப்பட்டு சென்றனர்.
இது குறித்து காந்திமார்க்கெட் வியாபாரி கதிரேசன் கூறுகையில், கடந்த வாரம் 25 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.2,500-க்கு விற்பனையானது. ஆனால் நேற்று பெட்டி ரூ.3,200 முதல் ரூ.3,500 வரை விற்கப்பட்டது. இதனால் தக்காளி விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இனி வரும் நாட்களில் மேலும் விலை உயர்வதற்கே வாய்ப்பு உள்ளது. தமிழகத்துக்கு தக்காளி தேவை அதிகமாக உள்ளது. ஆனால் அந்த அளவுக்கு வரத்து இல்லை. மாறாக, தமிழகத்தில் இருந்து ஆந்திரா, நாக்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி கொண்டு செல்லப்படுகிறது. அதனால் இங்கு நாளுக்கு, நாள் விலை உயர்ந்து வருகிறது என்றார்.