பூக்கள் விலை கிடு, கிடு உயர்வு


பூக்கள் விலை கிடு, கிடு உயர்வு
x
தினத்தந்தி 14 Jan 2023 12:30 AM IST (Updated: 14 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், பொங்கல் பண்டிகையையொட்டி பூக்கள் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ நேற்று கிலோ ரூ.3 ஆயிரத்து 500-க்கு விற்பனை ஆனது.

திண்டுக்கல்


புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அப்போது பூக்கள் விலை பலமடங்கு அதிகரிக்கும். அதன்படி திண்டுக்கல்லிலும் பண்டிகை நாட்களில் பூக்கள் விலை கிடு, கிடுவென உயரும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,000 வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி மார்க்கெட்டில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்தது. அதன்படி நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை விற்பனை ஆனது.

விலை உயர்வு

அதேபோல் ரூ.1,200-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.2 ஆயிரத்து 500-க்கும், ரூ.800 முதல் ரூ.950-க்கு விற்ற ஜாதிப்பூ, காக்கரட்டான் தலா கிலோ ரூ.1,500-க்கும், ரூ.500-க்கு விற்ற கனகாம்பரம் கிலோ ரூ.800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து திண்டுக்கல் பூமார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் சகாயம் கூறுகையில், பண்டிகை நாட்களுக்கு முன்னதாக வெளியூர் வியாபாரிகள் திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு வந்து அனைத்து வகையான பூக்களையும் வாங்கி செல்வது வழக்கம்.

அதன்படி திருச்சி, பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூ வியாபாரிகள் திண்டுக்கல்லுக்கு வந்து பூக்களை வாங்கி சென்றனர். மேலும் மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்தும் குறைவாக இருந்தது. இதுபோன்ற காரணங்களால் நேற்று பூக்களின் விலை உயர்ந்தது என்றார்.

மார்க்கெட்டில் (விலை கிலோவில்) ரோஜா ரூ.180, செவ்வந்தி ரூ.150, அரளி ரூ.400, சம்பங்கி ரூ.130, செண்டுமல்லி, கோழிக்கொண்டை தலா ரூ.70, வாடாமல்லி ரூ.50-க்கு நேற்று விற்பனை ஆனது.



Next Story