ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
ஆயுத பூஜையையொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
பூக்கள் விலை உயர்வு
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆயுத பூஜை நாளை (திங்கட்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆயுத பூஜை கொண்டாட தேவையான பூஜை பொருட்களை வாங்க கடைவீதிகள், மார்க்கெட் வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல் பூக்களை வாங்குவதற்கும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
சாதாரணமாக பண்டிகை காலங்களில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படும். அதேபோல் ஆயுத பூஜைக்கு இன்று ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் விழுப்புரம் பூமார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருந்த விலையை விட நேற்று ஒவ்வொரு பூக்களின் விலையும் இருமடங்காக உயர்ந்து காணப்பட்டது.
விலை விவரம்
அதாவது 3 நாட்களுக்கு முன்பு அரும்பு கிலோ ரூ.300-350-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று கிலோ ரூ.550-600 வரையும், ரூ.100-க்கு விற்ற சாமந்தி ரூ.200-க்கும், ரூ.120-க்கு விற்ற ரோஜா ரூ.250-க்கும், ரூ.450-500-க்கு விற்ற மல்லிகைப்பூ ரூ.700-க்கும், ரூ.200-க்கு விற்ற காக்கட்டான் ரூ.500-க்கும், ரூ.20-க்கு விற்ற கேந்தி ரூ.50-க்கும், ரூ.250-க்கு விற்ற அரளி ரூ.400-450-க்கும், ரூ.150-க்கு விற்ற சம்பங்கி ரூ.250-300-க்கும், ரூ.30-க்கு விற்ற கோழிக்கொண்டை ரூ.60-க்கும், ரூ.400-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.600-க்கும், ரூ.300-க்கு விற்ற ஜாதிமல்லி ரூ.450-500-க்கும், ரூ.300-க்கு விற்ற முல்லை ரூ.500-550-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்கள் வீடுகளுக்கு வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.