குளச்சலில் மீன்கள் விலை 'கிடுகிடு' உயர்வு


குளச்சலில் மீன்கள் விலை கிடுகிடு உயர்வு
x

குளச்சல் கடல் பகுதியில் சூறைக்காற்றால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 500 சாளை மீன்கள் ரூ.2,400 வரை விற்பனையானது.

கன்னியாகுமரி

குளச்சல்,

குளச்சல் கடல் பகுதியில் சூறைக்காற்றால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 500 சாளை மீன்கள் ரூ.2,400 வரை விற்பனையானது.

மீன்பிடி தொழில் பாதிப்பு

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1,000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் குளச்சல் கடல் பகுதியில் சூறைக்காற்று காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கடந்த 1-ந் தேதி அன்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகளும் பாதியிலேயே கரை திரும்பின. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது.

மீன்களுக்கு கடும் கிராக்கி

இந்த எச்சரிக்கை இன்று (சனிக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று 5-வது நாளாக பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. குறைந்த அளவிலான மீனவர்கள் மட்டுமே வள்ளம், கட்டுமரங்களில் மீன்பிடிக்க சென்றனர்.

கடல் சீற்றத்தின் காரணமாக குறைவான தொலைவில் சென்று மீன்பிடித்து வந்தனர். மீனவர்கள் வீசிய வலையில் துளுவன் சாளை, நெத்திலி மீன்கள் சிக்கியது. பின்னர் குளச்சல் மீன்பிடி துறைமுக ஏலக்கூடத்தில் கொண்டு வந்து மீன்கள் விற்பனை நடந்தது. அப்போது இந்த மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.

விலை உயர்வு

500 எண்ணம் கொண்ட துளுவன் சாளை ரூ.2,100 முதல் ரூ.2,400 வரை விலை போனது. வழக்கமாக துளுவன் சாளை 500 எண்ணம் ரூ.500 முதல் ரூ.600 வரை தான் விலை போகும். வேறு மீன்கள் கிடைக்காததால் மீன் பிரியர்கள் அதிக விலை கொடுத்து துளுவன் சாளையை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இதேபோல் 1 குட்டை நெத்திலி மீன்கள் ரூ.2,800 முதல் ரூ.3,000 வரை விலை போனது. வழக்கமாக இது ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை தான் விலை போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலில் காற்று தணிந்தால் தான் அனைத்து கட்டுமரங்களும் மீன் பிடிக்க செல்லும். அப்போது தான் மீன்களின் விலை குறையும் என மீனவர்கள் தெரிவித்தனர்.


Next Story