தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 2,604 பேரின் குறைகளை கேட்டு போலீசார் நடவடிக்கை


தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 2,604 பேரின் குறைகளை கேட்டு போலீசார் நடவடிக்கை
x

புதன்கிழமைதோறும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்கள் வாங்கும் திட்டத்தின்கீழ் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் போலீசார் 2,604 பேரை சந்தித்து மனுக்களை வாங்கினார்கள்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி வாரந்தோறும் புதன்கிழமை அன்று அனைத்து போலீஸ் கமிஷனர்களும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை வாங்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று (புதன்கிழமை) முதல் முறையாக தமிழகம் முழுவதும் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கும் நிகழ்ச்சி அனைத்து போலீஸ் கமிஷனர் அலுவலகங்களிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும் நடந்தது.

கோவையில் ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் ஒரு மேளா போல மக்களை வரவழைத்து குறைகளை நேரடியாக கேட்டு மனுக்களை பெற்றனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலும் நேற்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்களை வாங்கி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். போலீசாருக்கான குறைகளை கேட்டு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. கமிஷனர் நேரடியாக வந்து கலந்துகொண்டு போலீசாரின் குறைகளை கேட்கிறார்.

2,604 பேரிடம்

டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் நேற்று தனது அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் போலீசாரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவர் 52 பேரிடம் மனுக்கள் பெற்றார். இதேபோல தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 604 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டதாக டி.ஜி.பி. அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story