விழுப்புரம் சட்டக்கல்லூரி மாணவரை தாக்கியபோலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
விழுப்புரம் சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.
கோவை பல்லடத்தை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 23). இவர் விழுப்புரம் பகுதியில் தங்கி அங்குள்ள சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் தனது நண்பருடன் 2 மோட்டார் சைக்கிள்களில் புதுச்சேரி வந்தார்.
புதிய பஸ் நிலையம் அருகே வந்த போது, அங்கு சீருடையில் நின்று கொண்டு இருந்த போலீஸ்காரர் ஒருவர் ஹரிகரனிடம் 'லிப்ட்' கேட்டதாக கூறப்படுகிறது. உடனே அவர் அந்த காவலரை தனது வண்டியில் ஏற்றிக்கொண்டு வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகில் பாண்லே பூத் முன்பு இறங்கி விட்டார். பின்னர் அவர் அங்கிருந்து காந்திவீதி செல்ல ஒருவழி பாதை வழியாக திரும்பினார்.
தாக்குதல்
அப்போது அங்கு சாதாரண உடையில் வந்த போலீஸ்காரர் ஒருவர் ஹரிகரன் வண்டி சாவியை பிடுங்கினார். அதைப்பார்த்து 'லிப்ட்' கேட்டு வந்த போலீஸ்காரர் வண்டி சாவியை வாங்கி அந்த மாணவரிடம் கொடுத்துள்ளார். அப்போது ஹரிகரன் அவரிடம், தான் சட்டக்கல்லூரி மாணவர் என்று அறிமுகம் செய்து கொண்டு, சாதாரணை உடையில் வந்த நீங்கள் எப்படி சாவியை பிடுங்கலாம்? என்று கேட்டுள்ளார்.
அப்போது அந்த போலீஸ்காரர், மாணவரிடம் சட்டம் பேசாமல் வண்டியை எடுத்துக்கொண்டு போ! என்று திட்டியதாக கூறப்படுகிறது.
போலீஸ் நிலையம் முற்றுகை
மேலும் போலீஸ்காரர்கள் இருவரும் சேர்ந்து ஹரிகரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய தகவல் அறிந்த உடன் விழுப்புரம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் நேற்று புதுச்சேரி வந்தனர். அவர்கள் சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த உடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது அவர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.