முதலீடு செய்தால் கூடுதல் பணம் தருவதாக கூறி மோசடி:போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகைதிண்டிவனத்தில் பரபரப்பு


முதலீடு செய்தால் கூடுதல் பணம் தருவதாக கூறி மோசடி:போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகைதிண்டிவனத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதலீடு செய்தால் கூடுதல் பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி, திண்டிவனத்தில்போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனம் ரோஷணை போலீஸ் நிலையத்துக்கு நேற்று காலை, அந்த பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடன் அவர்களிடம் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கைது செய்ய வேண்டும்

அப்போது, திண்டிவனம் அருகே விநாயகபுரம் கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை 7 பேர் சேர்ந்து நடத்தி வந்தனர். அவர்கள், ஒரு லட்சம் பணத்தை முதலீடு செய்தால், 10 மாதத்துக்கு பின்னர் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினர். மேலும், மோட்டார் சைக்கிள், ஏ.சி. எந்திரம், பிரிட்ஜ் உள்ளிட்ட பல்வேறு வகையான கவர்ச்சி பரிசுகளையும் தருவதாக தெரிவித்தனர்.

இதை நம்பி, எங்களை போன்று பலர் முதலீடு செய்தனர். தற்போது பணத்தை சென்று கேட்டால் அதை தராமல், ஏமாற்றி வருகிறார்கள். எனவே இது குறித்து விசாரித்து எங்களது பணத்தை பெற்று தருவதுடன், 7 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

பரபரப்பு

அப்போது, போலீசார் இந்த மோசடி குற்றம் தொடர்பாக விழுப்புரத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் சென்று புகார் அளியுங்கள், நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்தனர்.

இதையேற்று அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story