புதுப்பேட்டை அருகே 2 வீடுகளில் ரூ.4 லட்சம் நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
புதுப்பேட்டை அருகே 2 வீடுகளில் ரூ.4 லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுப்பேட்டை,
பண்ருட்டி அருகே கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் பார்த்தசாரதி (வயது 37). கட்டிட மேற்பார்வையாளர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கினார்.
பின்னர் நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 7 பவுன் நகையை காணவில்லை. அவற்றை யாரோ மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் ஒரு வீடு
விசாரணையில் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதேபோல் அருகில் உள்ள ராமதாஸ் (60) என்பவரது வீட்டின் கதவை உடைத்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த 3 பவுன் நகை, பட்டுப்புடவை உள்ளிட்டவற்றை திருடிச்சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கடலூரில் இருந்து மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீடுகளை மோப்பம்பிடித்தபடி சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்த 2 வீடுகளில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.