அஞ்சலி செலுத்த சென்ற வாகனங்களை ஆய்வு செய்த போலீசார்
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடிக்கு சென்ற வாகனங்களை சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடி அமைத்து போலீசார் ஆய்வு செய்து அனுப்பினர்.
காரைக்குடி
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடிக்கு சென்ற வாகனங்களை சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சோதனை சாவடி அமைத்து போலீசார் ஆய்வு செய்து அனுப்பினர்.
நினைவு நாள்
பரமக்குடியில் நேற்று நடைபெற்ற தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை யொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமானோர் சென்று அஞ்சலி செலுத்த சென்றனர். இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் இருந்து காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமானோர் வாகனங்களில் சென்றனர். இதையடுத்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின் பேரில், பல்வேறு இடங்களில் உள்ள சோதனை சாவடி நிலையத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
காரைக்குடி உள்ளிட்ட பகுதியில் சென்ற வாகனங்களை கோவிலூர் காவல் சோதனை சாவடி நிலையத்தில் காரைக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.
எச்சரித்து அனுப்பினர்
இதேபோல் திருப்பத்தூர் வழியாக பரமக்குடிக்கு சென்ற வாகனங்களை திருப்பத்தூர் பைபாஸ் சாலையில் துணைபோலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன் தலைமையில் போலீசார் சோதனை செய்து அனுப்பினர். மேலும் மதுரை பகுதியில் இருந்து பரமக்குடி சென்ற வாகனங்களை மானாமதுரை அருகே கீழப்பசலை மற்றும் திருப்புவனம் அருகே கீழடி சோதனை சாவடியில் போலீசார் வாகனங்களை ஆய்வு செய்தனர்.
மேலும் வாகனங்களில் செல்வோரின் விவரங்கள் மற்றும் அதை வீடியோவாக பதிவு செய்தனர்.
மேலும் வாகனங்களில் தொங்கி சென்றவர்களை போலீசார் எச்சரித்து அமர்ந்து செல்ல வேண்டும் எனவும், பட்டாசு மற்றும் ஆயுதங்களை வாகனங்களில் எடுத்து செல்லக் கூடாது எனவும் அறிவித்து வாகனங்களின் விவரம் ஆகியவற்றை சேகரித்து அனுப்பி வைத்தனர்.