திருட சென்ற கடைக்குள் அசந்து தூங்கிய வாலிபர்... அலேக்காக தூக்கிய போலீஸ்
தேனியில், திருட சென்ற மளிகை கடைக்குள் படுத்து தூங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி,
தேனி பங்களாமேடு டி.பி. மேற்குத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 61). இவர், தனது வீட்டுக்கு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். தினமும் இரவு இவர், தனது கடையை பூட்டிவிட்டு மறுநாள் அதிகாலை வந்து திறப்பது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கடையை பூட்டிவிட்டு ராஜேந்திரன் வீட்டுக்கு தூங்கச் சென்றார். நேற்று அதிகாலை 5 மணியளவில் கடையை திறக்க வந்தார். கடையின் இரும்பு ஷட்டர் கதவை திறந்து உள்ளே சென்றபோது, உள்ளே வாலிபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனையடுத்து அந்த வாலிபரும் எழுந்து தப்பி ஓட முயன்றார்.
பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து தேனி போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தேனி பவர் ஹவுஸ் தெருவை சேர்ந்த விஸ்வநாத் (25) என்பதும், கடையில் தகரத்தால் ஆன மேற்கூரையை பிரித்து உள்ளே சென்று திருட முயன்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவசிராஜன் வழக்குப்பதிவு செய்து விஸ்வநாத்தை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, 'விஸ்வநாத் மீது பெரியகுளம், தென்கரை போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. தற்போது மளிகைக் கடையின் மேற்கூரையை பிரித்து திருடச் சென்றுள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. போதையில் அங்கேயே தூங்கி விட்டார். அதிகாலையில் கடையின் உரிமையாளர் கடையை திறக்கச் சென்றபோது சிக்கிக் கொண்டார்' என்றனர்.