விஷம் குடித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு
கள்ளக்காதல் விவகாரத்தில் விஷம் குடித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி,
கள்ளக்காதல் விவகாரத்தில் விஷம் குடித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்காதல்
நீலகிரி மாவட்டம் ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 30). இவர் ஊட்டி மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் வினோத்துக்கும், ஊட்டியை சேர்ந்த திருமணமான சாருமதி (29) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சாருமதியும், வினோத்தும் நெருங்கி பழகி வந்தனர். இதை அறிந்த வினோத்தின் உறவினர்கள் 2 பேரையும் கண்டித்து உள்ளனர். இதனால் மனமுடைந்த வினோத் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விஷம் குடித்தார்
இதைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்த வினோத் மனைவியின் சகோதரர் ரஞ்சித் (28) மற்றும் உறவினர்கள், வினோத்துடன் பழகுவதை நிறுத்தி விடுமாறு சாருமதியிடம் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் தகாத வார்த்தையால் திட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சாருமதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சாருமதி பரிதாபமாக இறந்தார்.
வாலிபர் கைது
இதுகுறித்து இளம்பெண்ணின் உறவினர்கள் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான போலீசார் சாருமதியின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் வினோத்தை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியதும், அதனால் வினோத் உறவினர்கள் தவறாக பேசி மன உளைச்சல் ஏற்படுத்தியதால் சாருமதி தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.