பா.ஜனதா நிர்வாகியை தாக்கியவரை கைது செய்ய வேண்டும்-எச்.ராஜா வலியுறுத்தல்
பா.ஜனதா நிர்வாகியை தாக்கியவரை கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா வலியுறுத்தினார்.
அறந்தாங்கியை சேர்ந்தவர் சக்திவேல், பா.ஜனதா பிரமுகர். இவர், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்ற சக்திவேல் அங்குள்ள அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த தி.மு.க. நிர்வாகியும், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரின் கணவருமான சண்முகநாதன் ஒப்பந்ததாரரும், பா.ஜனதா நிர்வாகியுமான சக்திவேலிடம் ஏன் சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகநாதன் சக்திவேலை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த சக்திவேல் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சக்திவேலை பா.ஜனதா மாநில பொறுப்பாளரான எச்.ராஜா சந்தித்து பேசினார். பின்னர் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அலுவலக கதவுகள் சாத்தப்பட்டிருந்தது. அதிகாரிகள் இல்லாத நிலையில் அங்கு இருந்த போலீசாரிடம் எச்.ராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து போலீசார் அனுப்பி வைத்தனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவரின் கணவர் சண்முக நாதன் ஒன்றியக்குழு தலைவரின் நாற்காலியில் அமர்ந்து பணிகளை பார்வையிடுவதுடம், தலைவரின் காரை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். மேலும் பா.ஜனதா நிர்வாகியை தாக்கிய சண்முகநாதனை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றார்.