இருவேறு கால நிலைகளால் வதைக்கப்படும் வேலூர் மக்கள்
கடும் பனிப்பொழிவு மற்றும் சுட்டெரிக்கும் வெயில் என இருவேறு கால நிலைகளால் வேலூர் மக்கள் வதைக்கப்பட்டு வருகிறார்கள்.
இருவேறு காலநிலைகள்
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், வேலூரில் காலநிலை மாற்றத்தால் பனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் வெயிலும் சுட்டெரிக்கிறது. இதனால் வேலூர் மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர்.
வழக்கமாக மற்ற மாவட்டங்களை விட வேலூரில் முன் கூட்டியே பனிப்பொழிவு தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட இன்னும் முன் கூட்டியே தொடங்கி விட்டது. இதனால் அதிகாலை வேளையில் அன்றாட பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த பனிப்பொழிவு பகல் 11 மணி வரை நீடிக்கிறது.
கடும் பனிப்பொழிவு
இதனால் சாலைகளில் முன்னால் செல்லும் வாகனங்களை தெளிவாக காண முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் கண்ணமங்கலம் பகுதியில் நேற்று காலை மூடுபனி அதிகமாக இருந்தது.
அதே நேரத்தில் மதிய வேளையில் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்தது. வெயில் அதிகமாக இருந்தாலும் வேலூர் நகர மலைகளை தெளிவாக பார்க்க முடியாத அளவு பனிமூட்டம் இருந்தது.
குடைபிடித்து
வெயில் காரணமாக வயல் வெளி, விளைநிலங்களில் பணி செய்ய சென்றவர்கள், வெயிலில் இருந்து காத்துக்கொள்ள குடைகளை பிடித்து பணியில் ஈடுபட்டனர். சதுப்பேரி அருகே சிறுகாஞ்சி, செம்பேடு பகுதிகளில் நிலக்கடலை அறுவடை செய்த பெண்கள் குடைகளை குச்சிகளில் கட்டி வைத்து, அதன் நிழலில் பணி செய்தனர்.
கால நிலை மாற்றத்தால் வேலூர் பகுதி மக்கள் பனி, வெயில் என ஒரே நேரத்தில் இரு வேறு கால நிலைகளை சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். இதனால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ஜலதோசம், காய்ச்சல் போன்ற உடல் நல பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த பனி காலத்தை மட்டுமே நம்பி, வட மாநில தொழிலாளர்கள் கம்பளி போர்வைகள், குல்லாக்களை விற்பனை செய்ய வேலூருக்கு வந்துள்ளனர். அவர்கள் கோட்டை அருகில் சாரதி மாளிகை எதிரில் முகாமிட்டு வியாபாரம் செய்து வருகின்றனர்.
இப்படி வேலூர் எப்போதுமே வித்தியாசமான கால நிலைக்கு பழக்கப்பட்டு விட்டதால், பனி, வெயில் மற்றும் மழை என எது வந்தாலும் சமாளிப்போம் என்கின்றனர் நம் வேலூர் மக்கள்.