கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஊர்மக்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஊர்மக்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் நடந்தது.
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், நெய்தலூர் தெற்கு கிராமம், சின்னப்பனையூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர், கருப்பசாமி ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிந்தது. இதையடுத்து நாளை காலை (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு நேற்று காலை சின்னப்பனையூர், காத்துப்பட்டி, வீராச்சிபட்டி, ராமாயிபனையூர் ஆகிய கிராமங்களை ஊர் பொதுமக்கள் பெருகமணிக்கு சென்று காவிரி ஆற்றில் புனித நீராடி தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு மேளதாளத்துடன் சின்னப்பனையூரில் உள்ள கடைவீதி உள்பட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தடைந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நாளை காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.