'வள்ளலார், பெரியாரின் பாதைகள் ஓர் இலக்கை நோக்கியதே' - கி.வீரமணி


வள்ளலார், பெரியாரின் பாதைகள் ஓர் இலக்கை நோக்கியதே -  கி.வீரமணி
x

வள்ளலார் பாதையும்-பெரியாரின் ஈரோட்டுப் பாதையும் ஓர் இலக்கினை நோக்கி இணையும் இரு வழிப்பாதைகளே என்பதைப் புரிந்துகொள்ளட்டும் எனக் கூறியுள்ளார்.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வடலூர் வள்ளலாரின் பிறந்த நாளை "தனிப்பெரும் கருணை நாளாக" கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்து, வரலாறு படைத்துள்ளது. வடலூர் வள்ளலார் தனது 6-ம் திருமுறை அறிவுக் கொத்துமூலம் அகண்ட தத்துவ ஞானியாக புதியதோர் ஒளிகாட்டினார்.

அவர் தனது பழைய மத முறைகளைச் சாடிடத் தயங்கவில்லை; உண்மைகள் உலகம் முழுவதும் உலா வர வேண்டும் என்ற உணர்வால் உந்தப்பட்டு உன்னதக் கருத்துக்கள் உதிர்த்தார். மதவாதத்தில் இருந்து விடுபட்டு தத்துவ ஞானியானார். தனிப் பெரும் கருணையராக, மானுட நேயராக, சாதி, மதங்கள், சடங்குகளை வெறுத்துப் பிரசார இயக்கம் தொடங்கினார்.

1930-களிலேயே தந்தை பெரியார் 'குடிஅரசு' வார ஏட்டில் வள்ளலாரின் சமயப் புரட்சிகளை அச்சிட்டுப் பரப்பிய முன்னோடி என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து மகிழ்ந்து, புரிந்து வள்ளலார் பாதையும் - பெரியாரின் ஈரோட்டுப் பாதையும் ஓர் இலக்கினை நோக்கி இணையும் இரு வழிப்பாதைகளே என்பதைப் புரிந்துகொள்ளட்டும். வாழ்க வள்ளலாரின் அறிவுக் கொத்தும் - கருணை மழைப் பொழிவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story