இலங்கைக்கு இயக்கப்பட உள்ள 'சிவகங்கை' பயணிகள் கப்பல் இன்று நாகை வருகை
‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் இன்று சென்னையில் இருந்து நாகை செல்ல உள்ளது. சோதனை ஓட்டத்துக்கு பின் இந்த கப்பல் தனது பயணத்தை தொடங்குகிறது.
நாகப்பட்டினம்,
நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த ஆண்டு(2023) அக்டோபர் மாதம் 14-ந்தேதி முதல் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 'செரியாபாணி' என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.
இந்தியா-இலங்கை உடனான தொப்புள் கொடி உறவை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையில் இந்த கப்பல் போக்குவரத்து அமைந்ததாக பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக அக்டோபர் மாதம் 23-ந் தேதியுடன் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் கப்பல் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும்? என்று பயணிகள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக கடந்த ஜனவரி மாதம் முதல் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
ஏற்கனவே இயக்கப்பட்ட 'செரியாபாணி' கப்பலுக்கு மாற்றாக 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட மற்றொரு பயணிகள் கப்பல் நாகை-இலங்கை இடையே கடல் பயணத்தை தொடங்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்ததால் பயணிகள் குழப்பத்தில் இருந்தனர்.
இதனிடையே நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு 'சிவகங்கை' பயணிகள் கப்பல் மே மாதம் 13-ந் தேதி முதல் இயக்கப்படும் என கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
நாகை-இலங்கை இடையை இயக்கப்படும் சிவகங்கை கப்பல் அந்தமானில் தயாராகி வந்தது. அந்த கப்பல் நேற்று முன்தினம் மதியம் சென்னை துறைமுகம் வந்தது. அங்குள்ள கப்பல் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வது உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னையில் இருந்து நேற்று மதியம் நாகை துறைமுகத்துக்கு சிவகங்கை கப்பல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த கப்பல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் தான் நாகை வந்தடைய உள்ளது.
நாகை துறைமுகம் வந்தடைந்த உடன் விதிமுறைகளுக்கு உட்பட்டு கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெறும். சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற பின்னர் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை ஏற்கனவே அறிவித்தபடி நாளை (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது.
160 பேர் பயணிக்கும் வகையில் இந்த கப்பல் இயக்கப்பட உள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.