ஸ்ரீமதி மரணம்: முதல்-அமைச்சரை முழுமையாக நம்புகிறோம் - மாணவியின் தாய் பேட்டி


ஸ்ரீமதி மரணம்: முதல்-அமைச்சரை முழுமையாக நம்புகிறோம் - மாணவியின் தாய் பேட்டி
x

மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது பெற்றோர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்களுடன் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முதல் கட்டமாக பிரேத பரிசோதனை கடந்த மாதம் 14-ம் தேதி அன்று செய்யப்பட்டது. இந்த பிரேத பரிசோதனையில் தங்களுக்கு திருப்தி இல்லை எனவும், மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், அந்த பிரேத பரிசோதனையில் தங்கள் தரப்பு மருத்துவர் இருக்க வேண்டும் எனவும் கூறி மாணவியின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தனி மருத்துவக் குழு ஒன்றை அமைத்தும் அதில் தடவியல் நிபுணர் ஒருவரையும் அமைத்தும் கடந்த மாதம் 19-ம் தேதி மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவில் தங்கள் தரப்பில் மருத்துவர் அமைக்க அனுமதி தரவில்லை எனவும் தங்களது தரப்பில் ஒரு மருத்துவரை அமைக்க உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மாணவியின் பெற்றோர் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டையே அணுக வேண்டும் என உத்தரவிட்டது. ஸ்ரீமதியின் பெற்றோர் மீண்டும் ஐகோர்ட்டை அணுகிய பொழுது இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் இரண்டு பிரேத பரிசோதனைகளின் போதும் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு அறிக்கை முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தொடர்ந்து நேற்று பள்ளி தாளாளர் உள்பட ஐந்து பேருக்கு சென்னை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்கள் சந்தித்து, எங்கள் மகள் மரண விவகாரத்தில் நீதி வேண்டும், வழக்கின் விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து மாணவி ஸ்ரீமதியின் தாய் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என முதல்-அமைச்சர் உறுதி அளித்துள்ளார்: முதல்-அமைச்சரை முழுமையாக நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story