அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன


அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன
x

சாலியமங்கலம் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

மெலட்டூர்:

3 போகம் நெல் சாகுபடி

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

அதன்படி இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

நெற்பயிர்கள் சாய்ந்தன

இதற்கிடையே மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடாததால் பயிர்கள் கருகின. இதனை தொடர்ந்து பல்வேறு சிரமப்பட்டு பயிர்களை விவசாயிகள் காப்பாற்றினர். ஒரு சில இடங்களில் தற்போது குறுவை அறுவடை பணி நடைபெற்று வருகிறது.

பாபநாசம் தாலுகாவில் சாலியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த குறுவை பயிர்கள் இன்னும் சில நாட்களில் அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து மழைநீரில் மூழ்கும் நிலை உள்ளது.

விவசாயிகள் கவலை

தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் வயல்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.

தொடர்ந்து மழை பெய்யும் நிலை உள்ளதால் வயலில் சாய்ந்துள்ள நெற்கதிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story