நகராட்சி அலுவலகத்தை உரிமையாளர்கள் முற்றுகை
சிதம்பரத்தில் தெருக்களில் சுற்றிய பன்றிகளை பிடித்ததை கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை, பன்றிகளின் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.
சிதம்பரம்,
தெருக்களில் சுற்றிய பன்றிகள்
சிதம்பரம் நகர பகுதியில் சமீப காலமாக பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், எனவே பொது இடங்களில் சுற்றித்திாியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் நகராட்சிக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து, நகர மன்ற தலைவர் கே.ஆர். செந்தில்குமார் உத்தரவின் பேரில், நகராட்சி ஊழியர்கள் நேற்று திரவுபதி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த 4 பன்றிகளை பிடித்தனர்.
நகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதம்
இதுபற்றி அறிந்த, பன்றிகளை வளர்த்து வரும் அதன் உரிமையாளர்கள் நகராட்சி ஊழியர்களிடம் ஏன் பன்றிகளை பிடிக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பிடிபட்ட பன்றிகளை வாகனத்தில் ஏற்றி நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர், பன்றி வளர்ப்போர் 50-க்கும் மேற்பட்டவர்கள் நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம், ஊழியர்களால் பிடித்து வரப்பட்ட பன்றிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எச்சரிக்கை
தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீசார், நகர சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி, தி.மு.க. நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பன்றிகளை பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் விடமாட்டோம் என்று அவர்களிடம் இருந்து கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, எச்சரித்து அனுப்பினர். மேலும், பிடிக்கப்பட்ட பன்றிகளை அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.