நெல்லுக்கு பதிலாக பணம் கேட்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை


நெல்லுக்கு பதிலாக பணம் கேட்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்ட கோவில்களில் நிலம் குத்தகைதாரர்களிடம் நெல்லுக்கு பதிலாக பணம் கேட்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்ட கோவில்களில் நிலம் குத்தகைதாரர்களிடம் நெல்லுக்கு பதிலாக பணம் கேட்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்டத்தில் 2023-2024-ம் ஆண்டில் சாகுபடி செய்யப்பட்ட நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்து போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் கருணாநிதி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்காசி வட்டார விவசாய குடும்பங்களில் 2 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் ஆடிப்பட்டத்திற்கான காய்கறி விதைகள் வினியோகத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

சங்கரன்கோவில் வட்டார தோட்டக்கலைத் துறையினர் ஏற்பாடு செய்திருந்த விவசாய கண்காட்சியையும், கலசலிங்கம் பல்கலைக்கழக தோட்டக்கலை பயிலும் மாணவர்கள் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த மாடித்தோட்ட மாதிரியினையும் கலெக்டரும், விவசாயிகளும் பார்வையிட்டனர்.

முறைகேடுகள்

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.

அதில், "கடையநல்லூர் பன்னிருகை பெரியகுளம் சிவசங்கர நாராயண கால்வாய் கூட்டு ஆய்விற்கு உத்தரவிட முறையான தேதியை அறிவிக்க வேண்டும். இலஞ்சியில் குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் பசுமையான விளைநிலத்தை தரிசு நிலமாக அறிவிக்கக்கூடாது. தென்காசி மாவட்ட அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் குத்தகை விளைநிலங்களில் இந்த ஆண்டு முதல் நெல் அளப்பதற்கு பதிலாக பணமாக செலுத்த உள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நெல் ரகத்திற்கு ஏற்றவாறு விலையும் மாறுபடுவதாலும், பணமாக பெறப்படும் பட்சத்தில் விவசாயிகள் அதை முறையாக அடைப்பதற்கு இயலாமலும் ஒருவேளை அவ்வாறு பெறப்படும் பணம் முறையாக விவசாயிகள் கட்டாமலும், அரசிற்கு முறையாக சென்றடையாமல் இருந்துவிடும். பல்வேறு முறைகேடுகளுக்கும் இடம் அளிக்கும் என்பதால் ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

141 மனுக்கள்

கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து 141 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து 15 நாட்களுக்குள் விரிவான மற்றும் விவசாயிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலை வழங்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் முருகன், வேளாண் இணை இயக்குனர் தமிழ் மலர், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகம்மாள், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story