நோன்பு கஞ்சியுடன் பல்செட்டை விழுங்கிய மூதாட்டி... லாவகமாக எடுத்து உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்


நோன்பு கஞ்சியுடன் பல்செட்டை விழுங்கிய மூதாட்டி... லாவகமாக எடுத்து உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
x
தினத்தந்தி 24 March 2024 11:30 AM GMT (Updated: 24 March 2024 12:25 PM GMT)

92 வயதான மூதாட்டியின் உணவுக்குழலில் பல்செட் சிக்கிய நிலையில், அரசு மருத்துவர்கள் போராடி அவரது உயிரை மீட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த மூதாட்டி ரஷியா பேகம் (92 வயது). ரமலான் நோன்பை முடித்துவிட்டு நோன்பு கஞ்சி குடித்த ரஷியா பேகம், தான் அணிந்திருந்த பல்செட்டையும் சேர்த்து விழுங்கிவிட்டார். முதலில் உணவுப்பாதையை அடைத்த பல்செட், பின்னர் உணவுகுழாயை கொக்கி போல அடைத்துக் கொண்டது. வலி பொறுக்க முடியாமல் துடித்த ரஷியா பேகத்தை, அதிநவீன வசதிகள் அடங்கிய பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை காப்பாற்ற முடியாது என்று கூறிய நிலையில், உடனடியாக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ரஷியா பேகம். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ஏற்கனவே, இரத்த அணுக்கள் குறைவாக இருந்தது. ரத்த கொதிப்பு நோயும் இருந்தது. உடலும் பலவீனமாக இருந்த நிலையில், உள்நோயாளிகள் பிரிவில் அவர், அனுமதிக்கப்பட்டார்.

பல்செட்டை எப்படி எடுப்பது என யோசித்த மருத்துவர் குழு, உள்நோக்கி கருவியை பயன்படுத்தி, உணவுக்குழலில் சிக்கியிருந்த பல் செட்டை வெளியே எடுத்தனர். இதில் சிக்கல் என்னவென்றால் ரஷியா பேகத்துக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதை தடுக்க ஆக்சிஜன் குழலை பொருத்தமுடியாத சூழல் நிலவியது. இந்த சூழலில் புத்திசாலித்தனமாக இயங்கி, பல்செட்டை அகற்றியது மருத்துவர் குழு.

இதுகுறித்து மருத்துவர் பாரதி மோகன் கூறுகையில், இது போன்ற தருணங்களில் பாதிக்கப்பட்டவர்களை தைரியப்படுத்தி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நேரம் ஆக ஆக, நம்பிக்கை குறையும்; பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என குறிப்பிட்டார். அரசு மருத்துவர்களின் துணிச்சலும், புத்திசாலித்தனமும் தற்போது அனைவராலும் பாரட்டப்பட்டு வருகின்றது.


Next Story