இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாட்டறம்பள்ளி அருகே குடிசை இடிந்து விழுந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாட்டறம்பள்ளி அருகே குடிசை இடிந்து விழுந்தது.
இடைவிடாதுமழை
'மாண்டஸ்' புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் லேசான மழை பெய்ய ஆரம்பித்தது. இரவு 10 மணிக்கு மேல் மழை வலுக்க தொடங்கியது. விடிய விடிய பெய்த மழை நேற்று பகல் முழுவதும் இடைவிடாது தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.
தொடர் மழையின் காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. மழையின் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கினர். இதனால் மக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஏதேனும் சேதம் ஏற்பட்டால் தயார் நிலையில் அதிகாரிகள் குழுவினர் இருந்தனர்.
வீடு இடிந்தது
நாட்டறம்பள்ளி ஒன்றியம் ஆத்தூர்குப்பம் ஊராட்சி பகுதியில் உள்ள வெள்ளைக்காரன் வட்டம் பகுதியில் முனியப்பன் என்பவர் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
தொடர்ந்து பெய்த மழையால் குடிசை வீட்டின் ஒரு பக்க சுவர் மேற்கூரை முழுவதுமாக சேதமடைந்து இடிந்து விழுந்தது. வெளிப்புறமாக விழுந்ததால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
தகவல் அறிந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி தலைமையில் அலுவலர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினர்.
அப்போது தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.
புளியமரம் வேரோடு சாய்ந்தது
வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் நெடுஞ்சாலையில் உள்ள புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால், வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலை போக்குவரத்து ஒரு வழி பாதையாக மாற்றியமைக்கப்பட்டது. 2 மணி நேரத்துக்கு மேலாக மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு அப்புறப்படுத்தினர்.
வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா மற்றும் வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர்.
கரையோர பகுதி மக்களுக்கு...
இதேபோல வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் அருகே மரம் ஒன்று மழையினால் வேரோடு சாய்ந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலமாக மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடியில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது, தாழ்வான பகுதியில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள குப்பம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் முழுவதும் பாலாற்றில் கலக்கும் நிலை உள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கலெக்டர் வேண்டுகோள்
மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு விவரம் (மி.மீ) வருமாறு:- ஆம்பூர் 16.70, ஆம்பூர் சுகர்மில் 18.50, ஆலங்காயம் 14.00, வாணியம்பாடி 18.00, நாட்டறம்பள்ளி 14.40, திருப்பத்தூர் 10.00
மேலும் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை நீர்நிலை பகுதிகளில் செல்லாதவாறு பார்த்துகொள்ள வேண்டும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.