தெலுங்கானாவை சேர்ந்தவர் பிணமாக கிடந்த மர்மம்


தெலுங்கானாவை சேர்ந்தவர் பிணமாக கிடந்த மர்மம்
x

தெலுங்கானாவை சேர்ந்தவர் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

ேவட்டவலம்

தெலுங்கானாவை சேர்ந்தவர் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த செகந்திராபாத் ஸ்ரீராம்லு நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமய்யா (வயது 45). இவரது மகள் அனிதாவுக்கு விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் திருமணம் நடந்தது.

இங்கு அவர் கணவருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் செகந்திராபாத் வந்த அனிதாவை கணவர் வீட்டிற்கு லட்சுமய்யா கடந்த வாரம் அழைத்து வந்தார்.

அதன் பின்னர் 10-ந் தேதி காலை 5 மணியளவில் ஊருக்கு செல்வதாக அனிதாவிடம் கூறிவிட்டு லட்சுமய்யா புறப்பட்டார். மறுநாள் தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டாரா என அஉனிதா ெசகந்திராபாத்தில் உள்ள தனது அண்ணன் அரியிடம் என்று போனில் விசாரித்துள்ளார். அப்போது அரி தந்தை வரவில்லை என்று தெரிவித்துள்ளார். அன்றே அரி அங்கிருந்து புறப்பட்டு வீரபாண்டி கிராமத்திற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை ஜமீன் அகரம் கிராமத்தில் மாயவன் என்பவரின் மக்கா சோள தோட்டத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் இருப்பதாக வந்த தகவலின் பேரில் வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது இது குறித்து தகவல் அறிந்த அரி அங்கு சென்றபோது தனது தந்தை லட்சுமய்யாவின் உடல்தான் என்பதை போலீசாரிடம் தெரிவித்தார்.

இது குறித்து அரி எழுத்துப்பூர்வமாக வேட்டவலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்கு பதிவு செய்து லட்சுமய்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லட்சுமய்யாவின் சாவில் உள்ள மர்மம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story