சகதிக்காடாய் மாறிய மலைப்பாதை
கொடைக்கானல் மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணி நடைபெறுவதால் சாலை சகதிக்காடாய் மாறியது.
கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான மலைப்பாதையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பாலங்கள் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் பணிகள் நிறைவடையவில்லை. இதனால் மழைக்காலங்களில் பாலங்கள் உள்ள பகுதியில் தண்ணீர் தேங்கி, அந்த மலைப்பாதை சகதிக்காடாக மாறிவிடுகிறது. அப்போது வாகனங்கள் சகதியில் சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பகல் நேரங்களில் சகதியில் சிக்கும் வாகனங்கள் டிரைவர்கள் மற்றும் பயணிகள் உதவியுடன் மீட்கப்படுகிறது. ஆனால் இரவு நேரங்களில் சகதியில் சிக்கும் வாகனங்கள் மீட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று இரவு கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. சாலைகளில் வெள்ளமென மழைநீர் கரைபுரண்டு ஓடியது. குறிப்பாக கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் பாலம் அகலப்படுத்தும் பணிகள் நடைபெறும் இடங்களில் மலைப்பாதை சகதிக்காடாக மாறியது. இதற்கிடையே கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலா வாகனங்கள், மலைப்பாதை சகதியில் சிக்கிக்கொண்டன. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து காத்திருந்து நின்றன.
எனவே பாலம் அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடிக்க வேண்டும். மேலும் மலைப்பாதையில் உள்ள சகதிகளை அகற்றி, தார்சாலை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.