நெல்லின் ஈரப்பத அளவை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் வேண்டுகோள்
நெல்லின் ஈரப்பத அளவை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மத்திய குழுவின் பரிந்துரையின் பேரில் நெல்லின் ஈரபதத்தை 17 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த அறிவிப்பு லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. இருந்த போதிலும் தற்போது தமிழகத்தில் மழைக்காலம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் தட்ப வெட்ப நிலையின் காரணமாக காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதின் காரணமாகவும் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். ஆதலால் தற்போது அறிவித்துள்ள ஈரப்பதத்தின் அளவை மேலும் உயர்த்தி வழங்க மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் முழு பயனையும் அடைவார்கள்.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும், வளர்ச்சியிலும் அக்கரையோடு செயல்படும் மத்திய அரசு, விவசாயிகளின் எண்ணங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப ஈரப்பதத்தின் அளவை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.